கோவை விமான நிலையத்துக்கு துப்பாக்கி குண்டுகளுடன் சென்ற பா.ஜனதா பிரமுகரால் பரபரப்பு
கோவை விமான நிலையத்துக்கு துப்பாக்கி குண்டுகளுடன் சென்ற பாரதீய ஜனதா கட்சி பிரமுகரால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை,
பாரதீய ஜனதா கட்சியின் கோவை கோட்ட பொறுப்பாளராக இருப்பவர் ஜி.கே.செல்வகுமார்.
கணபதியில் வசித்து வரும் இவர் நேற்று சென்னைக்கு காலை 8 மணிக்கு புறப்படும் விமானத்தில் செல்வதற்காக 7 மணிக்கு கோவை விமான நிலையத்துக்கு காரில் சென்றார். விமான நிலையத்தில் இவரது கைப்பையை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதில் 8 துப்பாக்கி குண்டுகள் இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஜி.கே.செல்வகுமாரிடம் விசாரணை நடத்தினர். தன்னிடம் துப்பாக்கி வைத்து இருப்பதற்கான உரிமமம் இருப்பதாகவும், தவறுதலாக குண்டுகளுடன் கைப்பையை எடுத்து வந்ததாகவும் கூறினார்.
துப்பாக்கி வைத்து இருப்பதற்கான உரிம ஆவணத்தை காட்டுமாறு மத்திய தொழிற்பாதுகாப்பு படை யினர் கேட்டனர். அதற்கு அவர் உரிம ஆவணம் வீட்டில் இருக்கிறது, சிறிது நேரத்தில் கொண்டு வர சொல்கிறேன் என கூறினார். அதன்படி உரிமத்தை வீட்டில் இருந்து கொண்டு வந்து காட்டினார்.
பின்னர் விமான நிலைய அதிகாரிகள் பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் அங்கு சென்று விசாரித்தார். அப்போது துப்பாக்கி குண்டுகளை வைத்திருந்த பையை மாற்றி எடுத்து வந்து விட்டதாக கூறினார்.
தனக்கு மிரட்டல்கள் இருப்பதால் உரிமம் பெற்று துப்பாக்கியை வைத்திருப்பதற்கான சான்றிதழ்களை மத்திய தொழில் பாதுகாப்பு படையினரிடம் காட்டினார். இதையடுத்து அவரிடம் எழுதி வாங்கிக் கொண்டு விடுவித்தனர். குண்டுகளையும் அவரிடம் ஒப்படைத்தனர்.
இதற்கிடையே செல்வகுமார் செல்ல இருந்த விமானம் சென்று விட்டது. பின்னர் காலை 11 மணிக்கு சென்னை சென்ற விமானத்தில் அவர் சென்றார். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.