பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: கணவனே மனைவியை கொன்று தூக்கில் தொங்கவிட்டது அம்பலம்


பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: கணவனே மனைவியை கொன்று தூக்கில் தொங்கவிட்டது அம்பலம்
x
தினத்தந்தி 27 Jun 2018 4:15 AM IST (Updated: 27 Jun 2018 12:59 AM IST)
t-max-icont-min-icon

பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மதுகுடித்துவிட்டு வந்ததை மனைவி தட்டிக்கேட்டதால் கணவரே அவரை அடித்துக்கொன்று தூக்கில் தொங்கவிட்டது அம்பலமானது.

ஈரோடு,

ஈரோடு திண்டல் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூட உணவகத்தில் சமையல் வேலை செய்து வருகிறார். இவருடையை மனைவி வள்ளி (வயது 25). இவர்களுக்கு கனிஷ்கா (3) என்ற பெண் குழந்தை உள்ளது. கடந்த 22–ந் தேதி அதிகாலை வள்ளி வீட்டுக்குள் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டு இருந்தார்.

இதுகுறித்து கிருஷ்ணன் ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, வள்ளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தாலுகா போலீசார், தற்கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், கிருஷ்ணன்–வள்ளி தம்பதிக்கு திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் இருப்பதால் இந்த சம்பவம் தொடர்பாக ஈரோடு ஆர்.டி.ஓ. நர்மதாதேவியும் மேல்விசாரணை நடத்தினார்.

இந்த விசாரணையில், வள்ளியை அவருடைய கணவர் கிருஷ்ணன் அடித்து கொன்றுவிட்டு, தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியது அம்பலமானது. இதைத்தொடர்ந்து தாலுகா போலீசார், தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றி கிருஷ்ணனை கைது செய்தனர்.

கைதான கிருஷ்ணன் போலீசில் கொடுத்த வாக்குமூலம் வருமாறு:–

சம்பவத்தன்று நான் மது குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றேன். அப்போது மதுகுடித்ததை கண்டித்து எனது மனைவி என்னிடம் சண்டையிட்டார். நானும் வாக்குவாதம் செய்தேன். அதன்பின்னர் எனக்கு சாப்பாடு கொடுக்காமல் படுக்கை அறைக்கு சென்று தூங்கிவிட்டார். உடனடியாக நானும் படுக்கை அறைக்குள் நுழைய முயன்றேன். அப்போது மதுகுடித்து விட்டு உள்ளே வர வேண்டாம் என்று என்னை கண்டித்தார். இதில் எங்களுக்குள் தகராறு முற்றியது. அதில் ஆத்திரம் அடைந்த நான் எனது மனைவியை கையால் ஓங்கி அறைந்தேன். அப்போது சுவரில் மோதிய வள்ளி கீழே விழுந்தார்.

அதைத்தொடர்ந்து நானும் தூங்கி விட்டேன். சுமார் 1½ மணிநேரம் கழித்து எழுந்து பார்த்தேன். அப்போதும் வள்ளி எழுந்திருக்காமல் தரையில் விழுந்து கிடந்தார். இதனால் அவருக்கு அருகில் சென்று பார்த்தபோது, அவருடைய தலையில் அடிபட்டு கீழே விழுந்து இறந்து விட்டது தெரிய வந்தது.

வெளியில் தெரிந்தால் என்னை போலீசார் கைது செய்துவிடுவார்கள் என்று நினைத்த நான், வள்ளி தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடினேன். எனவே வள்ளியின் உடலை எடுத்து சேலையில் கட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதை போல தொங்கவிட்டேன். ஆனால் நான் கொலை செய்ததை அதிகாரிகளின் விசாரணையில் கண்டுபிடித்து விட்டனர்.

இவ்வாறு அவர் வாக்குமூலம் கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட கிருஷ்ணன் ஈரோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story