அத்தாணியில் இருந்து குமாரபாளையத்துக்கு கடத்த முயன்ற 1½ டன் ரே‌ஷன் அரிசி லாரியுடன் பறிமுதல், டிரைவர் கைது


அத்தாணியில் இருந்து குமாரபாளையத்துக்கு கடத்த முயன்ற 1½ டன் ரே‌ஷன் அரிசி லாரியுடன் பறிமுதல், டிரைவர் கைது
x
தினத்தந்தி 27 Jun 2018 4:00 AM IST (Updated: 27 Jun 2018 12:59 AM IST)
t-max-icont-min-icon

அத்தாணியில் இருந்து குமாரபாளையத்துக்கு கடத்த முயன்ற 1½ டன் ரே‌ஷன் அரிசி லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது. டிரைவரும் கைது செய்யப்பட்டார்.

அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு இடத்துக்கு ரே‌ஷன் அரிசி கடத்தப்படுவதாக பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு சார்லசுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அவர் ஆப்பக்கூடல் போலீசாரை ஆப்பக்கூடல் நால்ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட உத்தரவிட்டார்.

அதன்படி போலீசார் சோதனையில் ஈடுபட்டார்கள். அப்போது மாலை 4 மணி அளவில் பின்பக்கம் தார்ப்பாய் போட்டு மூடிய ஒரு லாரி வேகமாக வந்தது. அதனால் சந்தேகம் அடைந்த போலீசார் லாரியை நிறுத்த முயன்றார்கள். ஆனால் லாரி நிற்காமல் சென்றுவிட்டது.

இதனால் உஷாரான போலீசார் மோட்டார்சைக்கிளில் லாரியை துரத்தினார்கள். ஒரிச்சேரி என்ற இடத்தில் லாரியை மடக்கி பிடித்து, டிரைவரை சுற்றிவளைத்தார்கள்.

அதன்பின்னர் லாரியின் பின்பக்கம் போட்டிருந்த தார்பாயை விலக்கி போலீசார் பார்த்தபோது, 20 மூட்டைகள் இருந்தன. அந்த மூட்டைகளை பிரித்து பார்த்தபோது, அவைகள் ரே‌ஷன் அரிசி என்று தெரிந்தது.

போலீசார் இதுகுறித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ரவிக்கு தகவல் கொடுத்தார்கள். அவர் விரைந்து சென்று லாரி டிரைவரிடம் தீவிர விசாரணை நடத்தினார். அதில் டிரைவர் பவானியை சேர்ந்த தங்கராசு (45) என்பதும், அவர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த அரிசி வியாபாரி ராஜேஷ் என்பவருக்கு அத்தாணியில் இருந்து 1½ டன் ரே‌ஷன் அரிசியை கடத்தி சென்றதும் தெரிந்தது. லாரி ராஜேசுக்கு சொந்தமானது என்றும் தங்கராசு விசாரணையில் கூறினார்.

இதைத்தொடந்து போலீசார் ரே‌ஷன் அரிசியுடன் லாரியை பறிமுதல் செய்து தங்கராசை கைது செய்தனர்.

மேலும் ரே‌ஷன் அரிசி கடத்திய லாரி ராஜேசுக்கு சொந்தமானதா? அவருக்காகத்தான் ரே‌ஷன் அரிசி கடத்தப்பட்டதா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story