சர்க்கரை ஆலை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்
கரும்பு நிலுவை தொகையை வழங்க கோரி சர்க்கரை ஆலை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செஞ்சி,
செஞ்சியை அடுத்த செம்மேடு கிராமத்தில் தனியார் சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையின் அரவை பருவத்திற்கு கரும்பு வெட்டி அனுப்பிய விவசாயிகளுக்கு அதற்கான தொகை வழங்கப்படவில்லை. கடந்த 5 மாதமாகியும் விவசாயிகளுக்கு கரும்புக்கான தொகை வழங்கப்படாததால், ஆலை அதிகாரிகளிடம் இது தொடர்பாக கரும்பு விவசாயிகள் கோரிக்கை மனுக்களை அளித்து வந்தனர். இருப்பினும் நடவடிக்கை எடுக்கப் படவில்லை.
இந்த நிலையில் கரும்பு நிலுவை தொகையை வழங்க கோரி, நேற்று விவசாயிகள் அனைவரும் கையில் கரும்புடன் சர்க்கரை ஆலை அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக முன்னாள் எம்.எல்.ஏ. ராமமூர்த்தி தலைமையில் ஒன்று திரண்டு பேரணியாக சென்றனர்.
போராட்டத்தை தொடங்குவதற்கு முன்பாக அதிகாரியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்து, தீர்வு காண்பது என்று விவசாயிகள் முடிவு செய்தனர். அதன்படி, ஆலையின் துணை பொது மேலாளர் வரதராஜை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர், விரைவில் நிலுவை தொகை வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
அதிகாரியின் பதிலை ஏற்க மறுத்த விவசாயிகள், தங்களுக்கு அடுத்த 15 நாட்களுக்குள் நிலுவை தொகை வழங்கப்படும் என்று கைப்பட எழுதி தரவேண்டும் என்று தெரிவித்தனர். ஆனால் இதை அதிகாரி ஏற்க மறுத்துவிட்டார்.
இதனால் அலுவலகத்தில் இருந்து வெளியேறிய விவசாயிகள், ஆலையை முற்றுகையிட்டு நிலுவை தொகையை வழங்க கோரி கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதை தொடர்ந்து, விவசாயிகளுக்கு சேரவேண்டிய நிலுவை தொகைக்கு உரிய முடிவு வரும் வரையில் போராட்டம் தொடரும் என்று அறிவித்த விவசாயிகள், அலுவலகத்தின் முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினார்கள்.
மாலை 5 மணிக்கு விவசாயிகளிடம் ஆலை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் வருகிற(அடுத்த மாதம்) 25-ந்தேதிக்குள் நிலுவை தொகை வழங்குவதாக எழுத்து பூர்வமாக ஆலை அதிகாரிகள் எழுதி கொடுத்தனர். இதையேற்று அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் குண்டுரெட்டியார், செயலாளர் தமிழரசன், பொருளாளர் வரதராஜன், நிர்வாகிகள் மாதவன், சின்னப்பா, முருகன், ஜோதிராமன், துரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story