பெரம்பலூர் மாவட்டத்தில் ஏரி, குளங்களில் பொதுமக்கள் இலவசமாக மண் எடுத்து கொள்ளலாம்


பெரம்பலூர் மாவட்டத்தில் ஏரி, குளங்களில் பொதுமக்கள் இலவசமாக மண் எடுத்து கொள்ளலாம்
x
தினத்தந்தி 27 Jun 2018 4:00 AM IST (Updated: 27 Jun 2018 1:19 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களில் இருந்து பொதுமக்கள் இலவசமாக மண் எடுத்து கொள்ளலாம் என்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 68 ஏரிகளிலும், ஊராட்சி துறையின் கட்டுபாட்டில் உள்ள 159 ஏரி, குளங்களிலும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வண்டல் மண், சவுடு மண், கிராவல் மண் ஆகியவற்றை விவசாயம், வீட்டு உபயோகம் மற்றும் மண்பாண்டம் தயாரித்தல் ஆகியவற்றிற்்கு நிபந்தனைகளின் அடிப்படையில் அந்தந்த பகுதிகளில் உள்ள வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31-ந்தேதி வரை இலவசமாக எடுத்து கொள்ளலாம்.

மேற்படி, மண் எடுக்க விரும்பும் மனுதாரரின் வசிப்பிடம் அல்லது வேளாண் நிலமும், வெட்டி எடுக்கப்பட வேண்டிய இடமும் அதே வருவாய் கிராமத்தில் அல்லது அருகில் உள்ள வருவாய் கிராமத்தில் இருக்க வேண்டும். விவசாய பணிகளுக்காக நன்செய் நிலத்திற்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏக்கர் ஒன்றிற்கு 75 கனமீட்டர் அல்லது 25 டிராக்டர் லோடுகளும், புன்செய் நிலத்திற்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏக்கர் ஒன்றிற்கு 90 கனமீட்டர் அல்லது 30 டிராக்டர் லோடுகளும், சொந்த வீட்டு உபயோகத்திற்கு 30 கனமீட்டர் அல்லது 10 டிராக்டர் லோடுகளும், மண்பாண்டம் தயாரித்தலுக்கு 60 கனமீட்டர் அல்லது 20 டிராக்டர் லோடுகளும் வழங்கப்படும்.

அடங்கலின்படி, விண்ணப்பதாரருக்கு சொந்தமான நிலம் அல்லது விவசாயம் செய்யும் குத்தகைதாரர் என்பதற்கு சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் பெறப்பட்ட சான்று இணைக்கப்பட வேண்டும். கனிமத்தை இலவசமாக பெற்றுக்கொள்ள கலெக்டரின் முன் அனுமதி பெற வேண்டும். அனுமதி யானது 20 நாட்களுக்கு மிகாமல் வழங்கப்படும். பொதுப் பணித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையால் மண் வெட்டி எடுக்க வரையறுக்கப்பட்ட பகுதியில் இருந்து மட்டுமே மண் வழங்க அனுமதி வழங்கப் படும். அனுமதிதாரர் தனக்கு அனுமதி வழங்கப்பட்ட ஏரி, குளத்திலிருந்து அவரது சொந்த செலவில் டிராக்டரை கொண்டு சென்று கனிமத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். வாகனத்தில் ஏரி தொடர் புடைய துறையால் கனிமம் வெட்டி ஏற்றி அனுப்பப் படும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 

Next Story