அரசு பள்ளியில் பரபரப்பாக நடந்த தேர்தல் வரிசையில் நின்று மாணவர்கள் ஓட்டு போட்டனர்


அரசு பள்ளியில் பரபரப்பாக நடந்த தேர்தல் வரிசையில் நின்று மாணவர்கள் ஓட்டு போட்டனர்
x
தினத்தந்தி 27 Jun 2018 4:15 AM IST (Updated: 27 Jun 2018 1:19 AM IST)
t-max-icont-min-icon

அன்னவாசல் அருகே அரசு பள்ளியில் மாணவர் அமைப்புக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் மாணவர்கள் வரிசையில் நின்று ஓட்டு போட்டனர்.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் குடுமியான்மலை அருகே மரிங்கிப்பட்டி உள்ளது. இங்கு அரசு ஆரம்பப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியின் தனிச் சிறப்புகளில் ஒன்று ஆண்டுதோறும் ஜூன் மாதம் மாணவர் அமைப்புக்கு தேர்தலை நடத்துவதுதான்.

அதேபோல் இந்தாண்டும் ஜூன் மாதம் பள்ளி திறந்தவுடனேயே மாணவர் அமைப்புக்கு தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டது. அன்று முதலே வேட்பாளர்களாக களமிறங்கும் மாணவர்கள் பிரசாரத்தை தொடங்கினார்கள். இந்தாண்டு மூன்றாம் வகுப்பு மாணவர்களும் வேட்பாளர்களாக களமிறங்க தேர்தல் சூடுபிடித்தது.

மொத்தம் நான்கு முதன்மை அமைச்சர் பொறுப்புகளும், நான்கு இணை அமைச்சர் பொறுப்புகளுக்கும் என மொத்தம் எட்டு மாணவர்கள் களத்தில் நின்றனர். யாருக்கு எந்த பதவி வழங்குவது என்பதற்காக நடைபெற்ற இந்த தேர்தல், நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு ஓட்டுப்போட மாணவர்கள் வரிசையில் நிற்க ஆரம்பித்தனர். எட்டு பேரின் பெயர்களை கரும்பலகையில் வரிசையாக எழுதி கட்டம் கட்டப்பட்டது. மாணவர்கள் வரிசையாக வந்து தங்களுக்கு பிடித்த மாணவரின் பெயர் உள்ள கட்டத்தில் ஓட்டுகளை பதிவு செய்து சென்றனர். வாக்களிக்கும்போது வாக்களிக்கும் மாணவர் மற்றும் ஆசிரியரைத் தவிர வேறு யாரும் இல்லாமல் ரகசியமாக வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. பிறகு மாணவர்கள் அனைவரையும் வகுப்பறைக்குள் வரவழைத்து வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டது.

இதில் அதிக வாக்குகள் பெற்றவர்களுக்கு ஏற்ப பொறுப்புகள் வழங்கப்பட்டன. உள்துறை அமைச்சராக திவ்யா, உள்துறை இணை அமைச்சராக பிரியதர்சினி, வெளித்துறை அமைச்சராக அழகப்பெருமாள், வெளித்துறை இணை அமைச்சராக சுதாகர், மதிய உணவுத்துறை அமைச்சராக சாதனா, மதிய உணவுத்துறை இணை அமைச்சராக சுகி, புலனாய்வுத் துறை அமைச்சராக காவியா, புலனாய்வுத்துறை இணை அமைச்சராக ஜனனி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் உறுதிமொழியுடன் பதவி ஏற்றுக்கொண்டனர்.

இந்த தேர்தலில் வெற்றிபெற்ற நான்காம் வகுப்பு மாணவி திவ்யா கூறும் போது, “தேர்தல் தேதியை அறிவித்ததில் இருந்து தேர்தல் எப்போது வரும் என்று காத்திருந்தேன். மாணவர்களிடம் எனக்கு வாக்களிக்கச் சொல்லி தினந்தோறும் பேசிக்கொண்டே இருந்தேன். என்னால் என் பள்ளிக்கு பெருமை வரும்படி நடந்து கொள்வேன்” என்றார்.

இதுகுறித்து தலைமை ஆசிரியர் நாகலெட்சுமி கூறும்போது, “நான் முன்பு பணியாற்றிய பள்ளிகளில் இதுபோன்று மாணவர்களுக்கு தேர்தல் கிடையாது. ஆனால் இங்கு வந்ததில் இருந்து, ஆசிரியர் திருப்பதி அவர்கள் தொடர்ந்து தேர்தல் நடத்தி வருவதால் அவருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து ஆண்டு தோறும் தேர்தல் நடத்தி வருகின்றோம். மாணவர்களும் அரசியலை தெரிந்து கொள்வது அவசியமாகிறது.” என்றார்.

இதுபற்றி ஆசிரியர் திருப்பதி கூறும்போது “நான் பணியேற்ற காலத்தில் இருந்து மாணவர் தேர்தலை சிறப்பாக நடத்தி வருகின்றேன். வருகின்ற தலைமை ஆசிரியர்கள் எனக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். மாணவர்களிடம் இளம்வயதிலேயே அரசியல் அறிவை கொண்டு செல்வது ஒவ்வொரு ஆசிரியரின் கடமையாகும். அந்த வகையில் இந்த தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் தேர்ந்து எடுக்கப்பட்டவர்களுக்கு உரிய பொறுப்புகளும் வழங்கப்படும்” என்றார். 

Next Story