பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம், கலெக்டர் தகவல்
பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சிவஞானம் கூறியுள்ளார்.
விருதுநகர்,
கலெக்டர் சிவஞானம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
காரீப் பருவ பயிர்களை பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி நடப்பாண்டில், விருதுநகர் மாவட்டத்தில், 423 தொகுப்பு வருவாய் கிராமங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ், கடன் பெறும் விவசாயிகள் அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் கட்டாயமாகப் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யப்படுவர்.
கடன்பெறா விவசாயிகள், மாவட்டத்தில் திட்டத்தை செயல்படுத்தும் காப்பீட்டு நிறுவனமான நியூ இந்தியா அஸ்யூரன்சின்அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ, பொது சேவை மையங்கள் மூலமாகவோ வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.
காரீப் பருவ பயிர்களான மக்காச்சோளம், பயறு வகைகளான உளுந்து, பாசி, துவரை, தட்டைப் பயறு மற்றும் நிலக்கடலை, பருத்தி, சோளம், கம்பு மற்றும் எள் பயிரிடும் விவசாயிகள் இந்த திட்டத்தில் பதிவு செய்ய வருகிற ஆகஸ்டு மாதம் 16–ந் தேதி கடைசி நாள் ஆகும். வெங்காயம் மற்றும் வாழைக்கு பதிவு செய்ய கடைசி நாள் அக்டோபர் 1–ந் தேதி ஆகும்.
பயிர் காப்பீட்டு தொகையில், விவசாயிகள் 2 சதவீதம் மட்டும் செலுத்த வேண்டும். அதாவது மக்காச்சோளம், பயறு வகைகள், நிலக்கடலை, பருத்தி, சோளம், கம்பு, எள், வெங்காயம் மற்றும் வாழை முறையே ரூ.436, ரூ.286, ரூ.391,, ரூ.416, ரூ.199, ரூ.194, ரூ.158, ரூ.1,293, ரூ.2,332 காப்பீட்டுக் கட்டணமாக செலுத்தினால் போதுமானது.
விவசாயிகள் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்தியபின் அதற்கான ரசீதையும் பொதுச் சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்.