சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலக இடைத்தரகர்கள் 3 பேருக்கு 1 வருடம் சிறை
சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு துணைபோலீஸ் சூப்பிரண்டு தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு துணைபோலீஸ் சூப்பிரண்டு தலைமையில் போலீசார் 19.9.2008 அன்று சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருத்தங்கல் சுதாகரன், ஆனைக்குட்டம் முருகேஸ்வரன், ஸ்ரீவில்லிபுத்தூர் அச்சங்குளம் செல்லப்பாண்டின் ஆகியோர் சந்தேகத்திற்கிடமான முறையில் அங்கு நின்றிருந்தனர். அவர்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்துச் சென்றனர். அவர்களிடம் முறையே ரூ.1,440, ரூ.2,700 மற்றும் ரூ.11,430 இருந்தது. அப்போது அவர்கள் அரசு ஊழியர்களுக்கு அதிக பணம் தந்து பயன்பெற, இந்தத் தொகையை வைத்திருந்தது தெரியவந்தது. இடைத்தரகர்களாக செயல்பட்ட மூவரையும் கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி சம்பத்குமார், இடைத்தரகர்கள் 3 பேருக்கும் தலா 1 வருடம் சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராத தொகையை கட்டத் தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை விதித்தும் நீதிபதி தீர்ப்பு அளித்தார்.