காரைக்குடியில் ஒரு மணி நேரத்திற்குள் 3 பெண்களிடம் 34 பவுன் நகை பறிப்பு


காரைக்குடியில் ஒரு மணி நேரத்திற்குள் 3 பெண்களிடம் 34 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 27 Jun 2018 4:15 AM IST (Updated: 27 Jun 2018 1:49 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியில் ஒரு மணி நேரத்திற்குள் 3 பெண்களிடம் 34 பவுன் நகை பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் ஒரே கும்பலைச் சேர்ந்த 3 நபர்கள் ஈடுபட்டது கண்காணிப்பு கேமரா மூலம் அம்பலமாகி உள்ளது.

காரைக்குடி,

காரைக்குடி ஹவுசிங் போர்டு பகுதியில் வசிப்பவர் வெற்றி. இவர் காரைக்குடி நகராட்சியில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி (வயது 40). இவர் தனது மகளுடன் காரைக்குடி கழனிவாசலுக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினர். அப்போது ஒரு மோட்டார்சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 3 மர்ம நபர்கள், இருசக்கர வாகனத்தை உதைத்து கீழே தள்ளினர். அதில் கீழே விழுந்த ஜெயந்தியின் கழுத்தில் கிடந்த 15 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பியோடினர்.

இதேபோல காரைக்குடி ஆறுமுகநகர் 5–வது வீதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி செல்வி (30). இருவரும் காரைக்குடி டவுனுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு பெரியார் சிலை அருகே சென்றுகொண்டிருந்தனர். அப்போது மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் செல்வியின் கழுத்தில் கிடந்த 8 பவுன் நகையை பறித்து சென்றுவிட்டனர்.

காரைக்குடி கீழத்தெருவைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரி(வயது25). இவர் முடியரசனார் சாலையில் உள்ள மருத்துவமனைக்கு சென்று விட்டு கண்டனூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் விக்னேஸ்வரியின் கழுத்தில் கிடந்த 11 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பியோடினர்.

தொடர் சம்பவங்கள் குறித்து காரைக்குடி வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடைபெற்ற 3 இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்தனர். அப்போது 3 சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே கும்பலைச் சேர்ந்த 3 பேர் என்று தெரியவந்தது. சம்பவம் நேற்று முன்தினம் இரவு 7.30 மணி மற்றும் 8.30 மணிக்குள் நடந்துள்ளது. ஒருமணி நேரத்திற்குள் 3 பெண்களிடம் 34 பவுன் சங்கிலி பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளதால் காரைக்குடியில் வெளியே செல்லும் பெண்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர்.

மேலும் காரைக்குடி குற்றப்பிரிவு போலீசில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த போலீசார் பல்வேறு பிரிவிற்கு மாறுதலாகி விட்டதால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்துள்ளது. எனவே குற்றப்பிரிவு போலீஸ் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனுக்கு காரைக்குடி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story