குமரி மாவட்டத்தில் 14 இடங்களில் நடந்தது போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஜோதி ஓட்டம்- பேரணி


குமரி மாவட்டத்தில் 14 இடங்களில் நடந்தது போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஜோதி ஓட்டம்- பேரணி
x
தினத்தந்தி 26 Jun 2018 10:45 PM GMT (Updated: 26 Jun 2018 8:58 PM GMT)

போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் மற்றும் பேரணி குமரி மாவட்டத்தில் 14 இடங்களில் நடந்தது. இதில் இளைஞர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

நாகர்கோவில்,

உலக போதை ஒழிப்பு விழிப்புணர்வு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கோட்டார் மறைமாவட்ட போதைநோய் நலப்பணிகளின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் மாவட்டம் முழுவதிலும் இருந்து, அதாவது கன்னியாகுமரி, தென்தாமரைக்குளம், பள்ளம், கேசவன்புத்தன்துறை, முட்டம், குளச்சல், ரீத்தாபுரம், குறும்பனை, இனயம், சுங்கான்கடை, நாகர்கோவில் கார்மல்நகர், எட்டாமடை, ராஜாவூர், ஆரல்வாய்மொழி ஆகிய 14 இடங்களில் இருந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் நடந்தது.

இந்த ஜோதி ஓட்டம் நாகர்கோவில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் இல்ல வளாகத்தில் அமைந்துள்ள செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முடிவடைந்தது. ஜோதி ஓட்டத்தில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள், மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நாகர்கோவிலில், இளைஞர்கள் கொண்டு வந்த ஜோதியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினார்.

பின்னர் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. இதில் மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.கருப்பையா விழிப்புணர்வு குறும்பட சி.டி.யை வெளியிட்டு பேசினார். தலைமை குற்றவியல் நீதிபதி வி.பாண்டியராஜ் மதுபோதையில் இருந்து மீண்டோரை கவுரவித்து, வாழ்த்தி பேசினார். சார்பு நீதிபதி ஏ.பசும்பொன் சண்முகையா நினைவு பரிசு வழங்கி வாழ்த்தி பேசினார். கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை விழா சிறப்பு மலரை வெளியிட்டு தலைமை உரையாற்றினார். ஓய்வுபெற்ற ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் ‘சமூக சவால்கள்‘ என்ற ஒலித்தகட்டை வெளியிட்டு ஆசியுரை வழங்கினார்.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி பாலா பரிசு வழங்கி பேசினார். கோட்டார் மறைமாவட்ட முதன்மை பணியார் கிலேரியஸ் விழிப்புணர்வு ஸ்டிக்கரை வெளியிட்டார். மாவட்ட அரசு குற்றவியல் வக்கீல் ஞானசேகர் வாழ்த்தி பேசினார். இதில் அருட்பணியாளர்கள் நெல்சன், ஆன்றனி அல்காந்தர் மற்றும் சகாய பிராங்கோ, அருள்குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் குமரி மாவட்ட நிர்வாகம், பொது சுகாதாரத்துறை, மண்டைக்காடு ஏ.எம்.கே. மதுபோதை மறுவாழ்வு மையம் ஆகியவற்றின் சார்பில் நாகர்கோவில் பள்ளி- கல்லூரி மாணவ- மாணவிகள் பங்கேற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு தின பேரணி நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து நேற்று தொடங்கியது. பேரணியை மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் மதுசூதனன் முன்னிலை வகித்தார். மண்டைக்காடு ஏ.எம்.கே. மதுபோதை மறுவாழ்வு மைய இயக்குனர் அருள்ஜோதி வரவேற்று பேசினார். ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரி முதல்வர் டாக்டர் லியாகத் அலி உள்பட பலர் கலந்து கொண்டனர். பேரணி எஸ்.எல்.பி. பள்ளியை சென்றடைந்தது. அங்கு நடந்த விழாவில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் நடராஜன், சில்வெஸ்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியிலும் மனநல மருத்துவத்துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை டீன் (பொறுப்பு) ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை முதல்வர் லியோடேவிட், உறைவிட மருத்துவ அதிகாரி ஆறுமுகவேலன், மனநல மருத்துவ துறை பேராசிரியர் டாக்டர் அருள்பிரகாஷ், டாக்டர் கலைக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேரணியில் மருத்துவக்கல்லூரி மாணவ- மாணவிகள், பயிற்சி டாக்டர்கள், நர்சிங் மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்கள் தங்கள் கைகளில் போதை விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் பிடித்திருந்தனர். 

Next Story