பெண்ணை கடத்த வந்திருப்பதாக நினைத்து 11 பேரை சுற்றி வளைத்து கிராம மக்கள் தர்ம அடி


பெண்ணை கடத்த வந்திருப்பதாக நினைத்து 11 பேரை சுற்றி வளைத்து கிராம மக்கள் தர்ம அடி
x
தினத்தந்தி 27 Jun 2018 4:45 AM IST (Updated: 27 Jun 2018 2:28 AM IST)
t-max-icont-min-icon

பச்சைமலையில் பெண்ணை கடத்த வந்திருப்பதாக நினைத்து 11 பேரை சுற்றி வளைத்து கிராம மக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

உப்பிலியபுரம்,

உப்பிலியபுரம் அருகே உள்ள பச்சைமலை பகுதியை சேர்ந்த பட்டதாரி பெண் ஒருவர், நேற்று காலை 10 மணியளவில் வீட்டில் இருந்து காட்டிற்கு தனியாக சென்று கொண்டிருந்தார். அவர் தனியாக செல்வதை நோட்டமிட்ட 3 வாலிபர்கள் அவரை பின்தொடர்ந்து விரட்டி சென்றனர். இதனால், அந்த பெண் பயந்துபோய் என்னை காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டபடியே ஓடினார்.

அவரது சத்தம் கேட்டு காட்டில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஓடி வந்தனர். கிராம மக்கள் ஓடிவருவதை கண்ட 3 வாலிபர்களும் அங்குள்ள சின்ன மங்கலம் நீர்வீழ்ச்சி பகுதி வழியாக தப்பி ஓடினர். அவர்களை விரட்டி சென்ற கிராம மக்கள் அங்கிருந்த 11 வாலிபர்களை சுற்றி வளைத்து, அவர்கள் பெண்களை கடத்த வந்திருப்பதாக நினைத்து தர்ம அடி கொடுத்தனர்.

இந்த செய்தி காட்டுத்தீ போல பச்சைமலை கிராமம் முழுவதும் பரவியது. இதனால், நீர்வீழ்ச்சி பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்தனர். அவர்களும் அந்த 11 பேரையும் அடித்து உதைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த உப்பிலியபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த 11 வாலிபர்களையும் மீட்டு உப்பிலியபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் அனைவரும் மாராடி கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதும், 5 மோட்டார் சைக்கிள்களில் பச்சைமலை நீர்வீழ்ச்சிக்கு குளிக்க சென்றதாகவும் தெரிய வந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த மாராடி கிராமத்தை சேர்ந்தவர்கள் உப்பிலியபுரம் போலீஸ் நிலையத்தில் கூடினார்கள். இதனால், பச்சைமலை மற்றும் மாராடி கிராம மக்களிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. நடந்த சம்பவம் குறித்து பட்டதாரி பெண் கொடுத்த புகாரின்பேரில் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் பச்சைமலை மற்றும் உப்பிலியபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நேற்று பகல் 2 மணியளவில் ஒரு பெண் உப்பிலியபுரம் அருகே உள்ள சோபனபுரம் கிராமத்தில் 4 செல்போன்களை வைத்துக்கொண்டு, மாறி, மாறி பேசிக்கொண்டே வீதிகளில் வலம் வந்ததாக கூறப்படுகிறது. அந்தப்பெண், குழந்தைகளை கடத்த வந்திருக்கலாம் என்று நினைத்த கிராமமக்கள் அந்த பெண்ணை பின்தொடர்ந்து சென்று உப்பிலியபுரத்தில் வைத்து மடக்கி பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.

அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த பெண்ணின் பெயர் சம்சாத் (வயது 45) என்பதும், கள்ளக்குறிச்சி அருகில் உள்ள லப்பைக்குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் என்பதும், சற்று மனநிலை சரியில்லாதவர் என்பதும் தெரிய வந்தது. அந்த பெண்ணின் பெற்றோருக்கு போலீசார் தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள் வந்தபிறகுதான் சம்சாத் எதற்காக சோபனபுரம் வந்தார் என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். 

Next Story