தடுப்புக்கட்டையில் கார் மோதல்; ஓய்வு பெற்ற ஆசிரியர் உள்பட 2 பேர் பலி


தடுப்புக்கட்டையில் கார் மோதல்; ஓய்வு பெற்ற ஆசிரியர் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 27 Jun 2018 5:00 AM IST (Updated: 27 Jun 2018 5:00 AM IST)
t-max-icont-min-icon

ராமநத்தம் அருகே தடுப்புக்கட்டையில் கார் மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ராமநத்தம்,

ராமநத்தம் அருகே தடுப்புக்கட்டையில் கார் மோதிய விபத்து சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வல்லத்திராக் கோட்டையை சேர்ந்தவர் முத்து (வயது 75), ஓய்வு பெற்ற ஆசிரியர். நேற்று முன்தினம் காலை இவர் அதே பகுதியை சேர்ந்த தனது உறவினர்களான பன்னீர்செல்வம் மகன்கள் சசிக்குமார்(38), திருமேனி(33), மாரி மகன் தர்மலிங்கம் ஆகியோருடன் சொந்த வேலை காரணமாக ஒரு காரில் புதுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு சென்றார்.

பின்னர் அங்கு வேலையை முடித்து விட்டு நேற்று முன்தினம் மாலை மீண்டும் சொந்த ஊருக்கு அதே காரில் புறப்பட்டனர். காரை வல்லத்திராக் கோட்டையை சேர்ந்த சீரங்கன் மகன் அசோக்குமார்(42) என்பவர் ஓட்டினார்.

நள்ளிரவு 12 மணி அளவில் கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி சாலையின் நடுவில் இருந்த தடுப்புக்கட்டையில் மோதி சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது.

இதில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய முத்து, சசிக்குமார், டிரைவர் அசோக்குமார் உள்ளிட்ட 5 பேரும் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்து, அசோக்குமார் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் சசிக்குமார், தர்மலிங்கம் ஆகிய 2 பேரும் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

திருமேனி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே விபத்து பற்றி தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விபத்துக்குள்ளான காரை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story