ஹஜ் பவனுக்கு திப்பு சுல்தான் பெயர் சூட்டுவதில் இறுதி முடிவு எடுக்கவில்லை


ஹஜ் பவனுக்கு திப்பு சுல்தான் பெயர் சூட்டுவதில் இறுதி முடிவு எடுக்கவில்லை
x
தினத்தந்தி 27 Jun 2018 5:47 AM IST (Updated: 27 Jun 2018 5:47 AM IST)
t-max-icont-min-icon

ஹஜ் பவனுக்கு திப்பு சுல்தான் பெயர் சூட்டுவதில் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று மந்திரி ஜமீர்அகமதுகான் கூறினார்.

பெங்களூரு,

உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை, ஹஜ் துறை மந்திரி ஜமீர்அகமதுகான் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ஹஜ் பவனுக்கு திப்பு சுல்தான் பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை அரசுக்கு வந்துள்ளது. இதை நான் தெரிவித்து உள்ளேன். இது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. இந்த விஷயத்தில் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. இதுபற்றி முதல்-மந்திரி குமாரசாமி, முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருடன் கலந்து ஆலோசிப்பேன். எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பாவையும் சந்தித்து இதுகுறித்து பேசுவேன்.

ஹஜ் பவன் கட்ட முதல்-மந்திரியாக இருந்தபோது எடியூரப்பா ரூ.40 கோடி நிதி ஒதுக்கினார். ஹஜ் பவன் கட்டப்பட்டதில் எடியூரப்பாவின் பங்கு முக்கியமானது. அதனால் அவருடைய ஆலோசனையும் மிக முக்கியம். சிறிய கார் வேண்டாம், பெரிய கார் தான் வேண்டும் என்று நான் கேட்கவில்லை. ‘பார்ச்சுனர்‘ கார் வேண்டும் என்று எனது துறை அதிகாரிகளிடம் தெரிவித்தேன். அது ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கார்.

இந்த விஷயத்தில் எனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. ரூ.2 கோடி மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ. கார் வேண்டும் என்று நான் கேட்கவில்லை. விவசாயிகளின் நலனுக்காக எனக்கு வழங்கப்பட்டுள்ள காரை தியாகம் செய்யவும் நான் தயார். எங்களுக்கு விவசாயிகள் நலன் தான் முக்கியம். விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பட்ஜெட் தாக்கல் செய்ய அனுமதி வழங்கியுள்ளார். அதனால் குமாரசாமி பட்ஜெட் தாக்கல் செய்வார். பட்ஜெட் தாக்கலுக்கு சித்தராமையா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. முந்தைய ஆட்சியில் எனது துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட 10 சதவீதம் கூடுதலாக ஒதுக்கினால் போதும். அதிக நிதி வேண்டும் என்று கேட்க மாட்டேன். விவசாயிகள் நலனை காக்க வேண்டியது அவசியம்.

இவ்வாறு ஜமீர்அகமதுகான் கூறினார். 

Next Story