தட்சிண கன்னடா மாவட்டத்தில் கனமழை


தட்சிண கன்னடா மாவட்டத்தில் கனமழை
x
தினத்தந்தி 27 Jun 2018 5:59 AM IST (Updated: 27 Jun 2018 5:59 AM IST)
t-max-icont-min-icon

தட்சிண கன்னடா மாவட்டத்தில் நேற்றும் கனமழை பெய்தது. இதனால் முடிப்பு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது.

மங்களூரு,

தட்சிண கன்னடா, உடுப்பி, கார்வார் ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டியது. இதனால் ஏராளமான இடங்கள் வெள்ளக்காடாக மாறின. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங் களில் மண்சரிவும் ஏற்பட்டது. கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்றுமுன்தினமும் கனமழை பெய்தது. இதில் பல்குனி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், ஆற்றின் குறுக்கே மூலாரப்பட்டணா பகுதியில் அமைந்துள்ள ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்தது. இதனால் குருப்புரா-முத்தூர் ஆகிய கிராமங்களுக்கான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. அந்த 2 கிராமங்களுக்கும் இடையே மாற்றுப்பாதையை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்றும் தட்சிண கன்னடா மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக மங்களூரு, மூடபித்ரி, முல்கி, பெல்தங்கடி, சுள்ளியா, புத்தூர் ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டியது. கனமழையால் மங்களூரு அருகே முடிப்பு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் கோனஜே-மெல்கார் கிராமங்களுக்கு இடையேயான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக மங்களூரு கடல் பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவில்லை. இதனால் மங்களூரு, பந்தர், மல்பே, கார்வார் ஆகிய மீன்பிடி துறை முகங்களில் படகுகள் அனைத்தும் தேங்கி கிடந்தன. 

Next Story