நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்


நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்
x
தினத்தந்தி 28 Jun 2018 3:30 AM IST (Updated: 27 Jun 2018 6:17 PM IST)
t-max-icont-min-icon

நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

நெல்லை, 

நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

ஆனித்திருவிழா

தென் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் முதன்மையானது நெல்லை டவுன் நெல்லையப்பர்–காந்திமதி அம்மன் கோவிலாகும். இந்த கோவில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும்.

நெல்லையப்பர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனித்திருவிழா 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 19–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. காலை மற்றும் இரவில் சுவாமி, அம்பாள், பரிவார மூர்த்திகளுடன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர்.

தேரோட்டம்

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9–வது நாளான நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு மேளதாளம் முழங்க சுவாமி, அம்பாள் தேரில் எழுந்தருளினர். சுவாமி தங்க ஜரிகை போட்ட வெண்பட்டும், அம்பாள் சிவப்பு நிற கரைபோட்ட மஞ்சள் நிற பட்டும் உடுத்தி இருந்தனர்.

தாமரை மலர் மாலை உள்ளிட்ட மாலைகள் சுவாமி, அம்பாளுக்கு அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தன. தேரோட்டத்தை காண நேற்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் நெல்லை டவுன் நான்கு ரத வீதிகளிலும் வந்து குவிய தொடங்கினார்கள்.

சுவாமி தேர்

காலை 9.30 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுவாமி தேரை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இதனையடுத்து “ஓம் நமசிவாய, தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி“ என்று பக்தி கோ‌ஷங்கள் எழுப்பியவாறு பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டம் தொடங்கியதும் வானத்தில் 5 கருடன்கள் வட்டமிட்டன.

தேருக்கு முன்பு மேளதாளம், பஞ்சவாத்தியங்கள் முழங்கின. யானை ஊர்வலமாக சென்றது. ஒரு வடத்தை பெண்களும், மீதி 3 வடங்களை இளைஞர்களும், பெரியவர்களும் பிடித்து இழுத்தனர். தேருக்கு பின்னால் இளைஞர்கள் தடி போட்டனர். காலை 10.10 மணிக்கு வாகையடி முனையை தேர் வந்தடைந்தது. 10.35 மணி அளவில், சந்தி பிள்ளையார் கோவில் திருப்பத்தை தேர் கடந்தது.

அங்கிருந்து சற்று நேரத்தில் தேர் புறப்பட்டு 11.25 மணிக்கு லாலாசத்திரம் முக்கு பகுதியை வந்து சேர்ந்தது. மதியம் 12.35 மணிக்கு வடக்கு ரத வீதியை கடந்து கீழரதவீதியை அடைந்தது. 1.25 மணிக்கு போத்தீஸ் கார்னருக்கு சுவாமி தேர் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.

அம்பாள் தேர்

அதனைத்தொடர்ந்து காந்திமதி அம்பாள் தேரை பக்தர்கள் இழுத்தனர். இதற்கிடையில் சுவாமி தேரை நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தும் பணியை பக்தர்கள் மேற்கொண்டனர். மீண்டும் சுவாமி தேரை வடம் பிடித்து இழுத்து நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தினர். அப்போது சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதற்கிடையே தேரோடும் வீதிகளில் வலம் வந்த அம்பாள் தேர், சுவாமி தேருக்கு பின்னால் நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.

முன்னதாக விநாயகர் தேர், சுப்பிரமணியர் தேர்கள் இழுக்கப்பட்டன. இறுதியாக சண்டிகேசுவரர் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. தேரோட்டம் காண வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர். நான்கு ரதவீதிகள் முழுவதும் காணும் இடமெல்லாம் பக்தர்கள் தலைகளாக காட்சி அளித்தது.

எம்.பி.க்கள்.–எம்.எல்.ஏ.

விழாவில் எம்.பி.க்கள் முத்துக்கருப்பன், கே.ஆர்.பி.பிரபாகரன், ஏ.எல்.எஸ்.லட்சுமணன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. ராமசுப்பு, முன்னாள் மேயர் புவனேசுவரி, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், உதவி கலெக்டர் மைதிலி, மாநகர போலீஸ் கமி‌ஷனர் மகேந்தர்குமார் ரத்தோட், துணை போலீஸ் கமி‌ஷனர் பெரோஸ்கான் அப்துல்லா, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் பரஞ்சோதி, கோவில் நிர்வாக அதிகாரி ரோஷினி, பேஸ்கார் முருகேசன், கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) ராமசுப்பிரமணியன், சிரஸ்தார் சிவகுமார், தாசில்தார்கள் கணேசன், கந்தசாமி, துணை தாசில்தார் ஓசனா பெர்ணான்டோ, மாநகர நல அலுவலர் டாக்டர் பொற்செல்வன், நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், சூப்பர் மார்க்கெட் தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, சிறுபான்மைபிரிவு மாவட்ட செயலாளர் கபிரியேல் ஜெபராஜன், பகுதி செயலாளர் மோகன், பெரியபெருமாள், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சேர்மபாண்டி, நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்யடியன், ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட தலைவர் செல்வகுமார், முன்னாள் அறங்காவலர் சோனா. வெங்கடாசலம், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முத்துக்குட்டி பாண்டியன் உள்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேரோட்டத்தை பார்க்க வந்த பக்தர்கள் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. முன் வாசல் வழியாக கோவிலுக்கு உள்ளே சென்று பக்தர்கள் தரிசனம் செய்து விட்டு வடக்குவாசல் வழியாக வெளியே செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தீவிர சோதனைக்கு பின்னரே பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். தேரோட்டத்தையொட்டி நெல்லை மாவட்டத்திற்கு நேற்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருந்தது.

நெல்லையப்பர் கோவிலில் கடந்த ஏப்ரல் மாதம் 27–ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்திற்கு பிறகு மண்டல பூஜை முடிந்து முதன் முதலாக ஆனித்திருவிழா நடந்தது குறிப்பிடத்தக்கது.

பலத்த பாதுகாப்பு

நெல்லை மாநகர போலீஸ் கமி‌ஷனர் மகேந்தர்குமார் ரத்தோட் உத்தரவின் பேரில் துணை கமி‌ஷனர்கள் சுகுணாசிங், பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் நேரடி மேற்பார்வையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நான்கு ரத வீதிகளிலும் 30 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன.

மேலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்த காவல்துறை வாகனம் தேருக்கு பின்னால் வந்தது. இதில் பதிவான அனைத்து காட்சிகளையும் டவுன் போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் உள்ள போலீசார் கண்காணித்தபடி இருந்தனர்.


Next Story