செய்யாறில் சுகாதாரமற்ற குடிநீர் கம்பெனிக்கு நோட்டீஸ்: உணவு பாதுகாப்பு அலுவலர் நடவடிக்கை


செய்யாறில் சுகாதாரமற்ற குடிநீர் கம்பெனிக்கு நோட்டீஸ்: உணவு பாதுகாப்பு அலுவலர் நடவடிக்கை
x
தினத்தந்தி 28 Jun 2018 3:00 AM IST (Updated: 28 Jun 2018 12:52 AM IST)
t-max-icont-min-icon

உணவு பாதுகாப்பு அலுவலர் கே.சீனுவாசன் தலைமையில் அதிகாரிகள் செய்யாறில் இயங்கி வரும் குடிநீர் கம்பெனிகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

செய்யாறு,

செய்யாறில் சுகாதாரமற்ற குடிநீர் கம்பெனிக்கு உணவு பாதுகாப்பு அலுவலர் சீனிவாசன் நோட்டீஸ் வழங்கினார்.

செய்யாறு டவுனில் 4 தனியார் குடிநீர் கம்பெனிகள் இயங்கி வருகிறது. இந்த கம்பெனிகள் மூலம் குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு செய்யாறு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் கேன்கள் வினியோகிக்கப்படுகிறது. வினியோகிக்கப்படும் குடிநீர் கேன்கள் தூய்மையின்றி சுகாதாரமற்ற முறையில் குடிநீர் உள்ளதாக உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் வி.செந்தில்குமாருக்கு புகார்கள் வந்தது. அவரது உத்தரவின்பேரில் செய்யாறு உணவு பாதுகாப்பு அலுவலர் கே.சீனுவாசன் தலைமையில் அதிகாரிகள் செய்யாறில் இயங்கி வரும் குடிநீர் கம்பெனிகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது தேவி தியேட்டர் பகுதியிலும், ஆற்றுப்பாலம் பகுதியிலும் இயங்கி வரும் குடிநீர் கம்பெனியில் சுகாதாரமற்ற முறையில் கேன்களில் குடிநீர் நிரப்பப்படுவதையும், முறையாக குடிநீர் பரிசோதனை செய்வதற்கான படிவங் கள் பூர்த்தி செய்யாமல் இருப்பதையும், கம்பெனியில் இருந்து வெளியே விற்பனைக்கு சென்ற குடிநீர் கேன்களில் காலாவதியாகும் தேதி குறிப்பிடாமல் அனுப்பியதும் கண்டறியப்பட்டது.

மேலும் பணியாளர்கள் தூய்மையின்றியும், கைகளில் கை உறை அணியாமலும் பணியாற்றியதால் சுகாதாரமற்ற முறையில் குடிநீர் சுத்திகரிப்பு மேற்கொண்டதற்காக குடிநீர் கம்பெனியின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தும், தியேட்டர் பகுதியில் இயங்கிய கம்பெனிக்கு குறைகளை சுட்டிக்காட்டி 7 நாட்களுக்குள் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என உணவு பாதுகாப்பு அலுவலர் கே.சீனுவாசன் நோட்டீஸ் வழங்கினார்.

ஆற்றுப்பாலம் பகுதியில் இயங்கிய குடிநீர் கம்பெனிக்கு எச்சரிக்கை மட்டுமே விடுத்து நோட்டீஸ் வழங்காமல் பாரபட்சம் காட்டியதாக கூறப் படுகிறது.

Next Story