கட்டண பாக்கிக்காக மின் இணைப்பை துண்டித்த அதிகாரிகள் சிறைபிடிப்பு
மின் கட்டண பாக்கிக்காக மின் இணைப்பினை துண்டித்த அதிகாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி,
புதுவையில் மின்கட்டண பாக்கி வைத்துள்ளவர்களின் மின் இணைப்புகளை துண்டிக்கும் நடவடிக்கையில் மின்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கவர்னர் நேரடியாக தலையிட்டுள்ளதால் இந்த விவகாரத்தில் அதிகாரிகள் முனைப்பு காட்டி வருகின்றனர்.
அதன்படி உருளையன்பேட்டை தொகுதி கண்டாக்டர் தோட்டம் அரசு குடியிருப்பு பகுதியில் மின்துறை உதவி பொறியாளர் ரவிச்சந்திரன், இளநிலை பொறியாளர் சுரேஷ் ஆகியோர் தலைமையிலான குழுவினர் மின் கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்புகளை நேற்று துண்டிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தெரியவந்ததும் அந்த பகுதியில் குடியிருக்கும் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து அங்கு திரண்ட அவர்கள் திடீரென்று மின்துறை அதிகாரிகளை சிறைபிடித்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கடந்த காலங்களில் ரூ.150 வரை மட்டுமே மாத கட்டணம் செலுத்தி வந்த நிலையில் தற்போது கட்டண தொகை ரூ.1000–க்கு மேல் வருவதாகவும், இதுதொடர்பாக மின்துறையில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை என்று குற்றஞ்சாட்டினார்கள்.
இதுபற்றி தகவல் அறிந்து தொகுதி எம்.எல்.ஏ.வான சிவா அங்கு விரைந்து வந்தார். பொதுமக்களிடம் விசாரித்த அவர் மின்துறை உயர் அதிகாரிகளிடம் பேசினார். அப்போது மின்கட்டண பாக்கி குறித்து முதல்–அமைச்சர் மற்றும் துறை அமைச்சரிடம் பேசி முடிவு செய்வதாகவும், அதுவரை மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையை நிறுத்தி வைக்குமாறு வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து மீண்டும் மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டது.
அதன்பிறகே மின்துறை அதிகாரிகளை பொதுமக்கள் விடுவித்தனர். கட்டண பாக்கி விவகாரத்தில் மின் இணைப்பை துண்டிக்க வந்த அதிகாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்த சம்பவம் அங்கு திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.