போலி நகைகளை அடகு வைத்து ரூ.1 கோடி மோசடி வங்கி ஊழியர் உள்பட 10 பேர் மீது வழக்கு
புதுவை வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.1 கோடி மோசடி செய்ததாக வங்கி ஊழியர் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
புதுவை நேரு வீதியில் சிண்டிகேட் வங்கி உள்ளது. இந்த வங்கியில் பலர் நகைகளை அடகு வைத்து கடன் பெற்றுள்ளனர். இந்த நகைகள் உண்மையானதுதானா? என்பது குறித்து வங்கி அதிகாரிகள் தணிக்கை செய்தனர்.
அப்போது போலி நகைகளை (கவரிங்) அடகு வைத்து சிலர் மோசடியாக கடன் பெற்றிருப்பது தெரியவந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த மோசடி நடந்திருப்பதும் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரியும் கரிக்கலாம்பாக்கம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த அய்யப்பன் (38) என்பவர் உடந்தையாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதை அறிந்து வங்கி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து வங்கியின் முதுநிலை மேலாளர் பவன்குமார் பெரியகடை போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் வங்கியின் நகை மதிப்பீட்டாளர் அய்யப்பன், போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்ததாக குருமாம்பேட்டையை சேர்ந்த பாலமுரளி கிருஷ்ணா, வெண்ணிலாநகர் ரத்தினாம்பாள், ராதாபுரம் சித்ரா, வில்லியனூர் வசந்தநகர் ஜெயஸ்ரீ, கோர்க்காடு தினேஷ்குமார், வங்கி முகவர் முனுசாமி, முத்தியால்பேட்டை பிரியங்கா, ராகவேந்திரா நகர் ராஜா, கோபாலன்கடை காசிநாதன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இவர்கள் தங்க நகைகளுடன் போலி நகைகளை சேர்த்து அடகு வைத்து கடன்பெற்றுள்ளனர். இதேபோல் மேலும் பலர் போலி நகைகளை அடகு வைத்து கடன் பெற்று மோசடி செய்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவ்வாறு சுமார் ரூ.1 கோடி வரை மோசடி செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. இந்த மோசடி குறித்து அறிந்து வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்தநிலையில் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றிய அய்யப்பன் கடந்த 20–ந்தேதி முதல் திடீரென்று மாயமானார். இந்த மோசடி குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் கரிக்கலாம்பாக்கம் போலீசார் அய்யப்பனை வலைவீசி தேடி வருகிறார்கள்.