புதியதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து திரண்ட பொதுமக்கள்


புதியதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து திரண்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 28 Jun 2018 4:45 AM IST (Updated: 28 Jun 2018 3:00 AM IST)
t-max-icont-min-icon

பல்லடம் அருகே புதியதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திரண்டனர். மேலும் டாஸ்மாக் கடையை உடனே மூடவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பல்லடம்,

பல்லடம் காரணம்பேட்டையில் இருந்து சின்ன கோடங்கிபாளையம் செல்லும் பாதையில் டாஸ்மாக் கடை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதற்காக அங்கு ஒரு புதிய அறை கட்டப்பட்டது.

இது பற்றிய தகவல் தெரியவந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், சின்னகோடங்கிபாளையம் செல்லும் காட்டுப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க கூடாது என்று மாவட்ட கலெக்டரிடமும், வருவாய்த்துறை அதிகாரிகளிடமும் ஏற்கனவே மனு கொடுத்து இருந்தனர். ஆனாலும் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி, சின்னகோடங்கிபாளையம் செல்லும் காட்டுப்பகுதியில் கட்டப்பட்டுள்ள அறையில் நேற்று திடீரென்று டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு வியாபாரம் நடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், அந்த டாஸ்மாக் கடை முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர் இது பற்றிய தகவல்அறிந்ததும் பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துசாமி மற்றும் போலீசார் விரைந்து வந்து அங்கு திரண்டு இருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் ‘‘சின்னகோடங்கிபாளையத்தில் 100–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். மேலும் இந்த வழியாகத்தான் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ–மாணவிகளும், வேலைக்கு செல்லும் பெண்களும் சென்று வருகிறார்கள். அப்போது தனியாக செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது. எனவே டாஸ்மாக் கடையை உடனே மூட வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தனர்.

அப்போது டாஸ்மாக் கடை வேண்டாம் என்று மனு கொடுங்கள் உரிய அதிகாரியிடம் பேசுகிறேன் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு கூறினார். அதன்படி துணை போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்து விட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


Next Story