விபத்தில் பலியானவர்களின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்


விபத்தில் பலியானவர்களின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 28 Jun 2018 4:15 AM IST (Updated: 28 Jun 2018 3:03 AM IST)
t-max-icont-min-icon

குமாரபாளையம் அருகே நடந்த விபத்தில் பலியானவர்களின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். நூற்பாலை உரிமையாளர் நஷ்டஈடு வழங்க அவர்கள் வலியுறுத்தினர்.

குமாரபாளையம்,

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் இருந்து வெப்படைக்கு நேற்று முன்தினம் 20-க்கும் மேற்பட்ட மில் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஒரு வேன் சென்றது. அந்த வேன் காவடியான்காடு என்ற இடத்தில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் அந்த வேன் எதிரே வந்த மினிலாரி மீது மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில், சடையம்பாளையத்தை சேர்ந்த அய்யம்மாள்(வயது 60), சந்திரம்மாள்(63), கற்பகம்(52), மாரியம்மாள்(40), பெருமாயி(55), வேம்மங்காடுவலசு பகுதியை சேர்ந்த வள்ளியம்மாள்(52) ஆகிய 6 பேர் பலியானார்கள். 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் பலியான அய்யம்மாள், சந்திரம்மாள், கற்பகம், வள்ளியம்மாள் ஆகியோரது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நேற்று பிரேத பரிசோதனைக்கு பிறகு பலியானவர்களின் உடல்களை அவர்களது போலீசார் உறவினர்களிடம் ஒப்படைக்க முயன்றனர்.

விபத்தில் பலியானவர்களின் உடல்களை வாங்க மறுத்து அவர்களது உறவினர்கள் திடீர் போராட்டம் நடத்தினார்கள். சம்பந்தப்பட்ட நூற்பாலை உரிமையாளர் தகுந்த நஷ்டஈடு வழங்கினால் தான் உடல்களை வாங்குவோம் என்று அவர்கள் கூறியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் விபத்தில் பலியானவர்களின் உறவினர்களை, நூற்பாலை உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக குமாரபாளையம் போலீஸ் நிலையத்திற்கு வரும்படி கூறினார்கள். இதையடுத்து குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் விபத்தில் பலியானவர்களின் உறவினர்களுக்கும், நூற்பாலை நிர்வாக அதிகாரிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருதரப்பினருக்கு இடையே போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது நூற்பாலை அதிகாரிகள், பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நஷ்டஈடு வழங்கவும், காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதனால் சமாதானம் அடைந்தவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். அதன்பிறகு இறந்தவர்களின் உடல்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 4 பேரின் உடல்களும் குமாரபாளையம் தர்மத்தோப்பு மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. 

Next Story