அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி


அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி
x
தினத்தந்தி 28 Jun 2018 4:15 AM IST (Updated: 28 Jun 2018 3:03 AM IST)
t-max-icont-min-icon

ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அடிப்படை வசதிகளை செய்து போதிய டாக்டர்கள் மற்றும் ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊத்தங்கரை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இங்கு ஊத்தங்கரை மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சைக்காக தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். மேலும் 50-க்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். தினசரி சுமார் 10-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் பிரசவத்திற்கு வந்து செல்கின்றனர்.

இந்த அரசு ஆஸ்பத்திரியில் 10 டாக்டர்களில் 3 பெண் டாக்டர்கள் மகப்பேறு விடுப்பிற்கும், 3 டாக்டர்கள் மேற்படிப்பிற்கும் சென்று விட்டனர். மருத்துவ அலுவலர் உள்பட 4 டாக்டர்கள் மட்டுமே பணியில் இருந்து வருகின்றனர். அதில் காலை நேரப்பணியில் 2 டாக்டர்கள் மட்டும் பணிபுரிகின்றனர். இதனால் காலையில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் டாக்டர்கள் பற்றாக்குறையால் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வருவதால் கூட்ட நெரிசலில் தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. 2 டாக்டர்கள் மட்டுமே சிகிச்சை அளிப்பதால் நோயாளிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது.

ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் 2 இடங்களில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆர்.ஓ. எந்திரம் இருந்தும் அதில் பழுது ஏற்பட்டு தண்ணீர் கிடைக்காமல் நோயாளிகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். சாலை விபத்தில் சிக்குபவர்களுக்கு எக்ஸ்ரே எடுக்க பாரூர் அரசு மருத்துவமனையில் இருந்து ஒருவர் கூடுதல் பணியாக வாரம் ஒரு முறை ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து எக்ஸ்ரே எடுக்கும் பணியில் ஈடுபடுகிறார். எக்ஸ்ரே எடுக்க போதிய பணியாளர்கள் இல்லாததால் நோயாளிகளின் குடும்பத்தினர் வெளியில் சென்று எக்ஸ்ரே எடுத்து வந்து வெயிலில் காயவைத்து டாக்டர்களிடம் காட்டுக்கின்றனர். அதற்கு காலதாமதம் ஏற்படுவதால் நோயாளிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

மேலும் இங்கு ஒரு மாதத்திற்கு சுமார் 10 முதல் 15 பேர் வரை சாலை விபத்து, உடல்நலக்குறைவு காரணமாக இறந்து விடுகின்றனர். இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்வதற்கு பிணவறை பகுப்பாளர் இல்லை. இதனால் இறப்பு ஏற்படும்போது கிருஷ்ணகிரியில் இருந்து பிணவறை பகுப்பாளரை வரவழைத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டி உள்ளது. இதனால் பல மணி நேரம் காத்து கிடந்து இறந்தவர்களின் உடலை குடும்பத்தினர் வாங்கி சென்று அடக்கம் செய்யும் நிலை உள்ளது.

இந்த ஆஸ்பத்திரி ஊத்தங்கரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளதால் தீவிர விபத்து சிகிச்சை பிரிவு இல்லாமல் விபத்தில் காயம் அடைபவர்கள் சிகிச்சை பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. டாக்டர்கள் பற்றாக்குறையால் அவர் களை மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வேலூர் ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்லுமாறு பரிந்துரை செய்கின்றனர். ஆனால் வழியிலேயே பலர் இறந்து விடும் சம்பவங் களும் நடைபெறுகிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அடிப்படை வசதிகள் செய்து போதிய டர்க்டர்கள், பணியாளர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story