வேளாங்கண்ணியில் இருந்து இலங்கைக்கு படகில் தப்பிச்செல்ல முயன்ற 4 பேர் கைது


வேளாங்கண்ணியில் இருந்து இலங்கைக்கு படகில் தப்பிச்செல்ல முயன்ற 4 பேர் கைது
x
தினத்தந்தி 28 Jun 2018 4:45 AM IST (Updated: 28 Jun 2018 3:05 AM IST)
t-max-icont-min-icon

வேளாங்கண்ணியில் இருந்து இலங்கைக்கு படகில் தப்பிச்செல்ல முயன்ற 2 குழந்தைகள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் நாகை கியூ பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். வேளாங்கண்ணி சின்ன மாதா கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது, அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் நின்று கொண்டு இருந்ததை பார்த்தனர்.

அவர்கள் அருகில் சென்ற கியூ பிரிவு போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையின்போது அவர்கள், முன்னுக்குபின் முரணான தகவல்களை தெரித்தனர். இதனைத்தொடர்ந்து, அவர்களை போலீசார் வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள், இலங்கை திரிகோணமலை நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெகத்மோகன், அவரது மனைவி சாந்தினி மற்றும் குழந்தைகள் சஜிர்தனா, ஸ்ரீவித் என்பதும், இவர்கள் மதுரை அகதிகள் முகாமில் வசித்து வந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. இவர்கள் தாயகம் செல்ல முடிவு செய்தனர். இதற்காக இடைத்தரகர்கள் மூலம் வேளாங்கண்ணி அருகே உள்ள செருதூர் கடற்பகுதியில் இருந்து கள்ள படகு மூலம் இலங்கை செல்வதற்காக படகிற்கு காத்திருந்தபோது கியூ பிரிவு போலீசாரிடம் சிக்கிக்கொண்டது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து கீழையூர் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் 4 பேரையும் கைது செய்தனர். உரிய பாஸ்போர்ட் இல்லாமல் கடல் மார்க்கமாக தப்பி செல்ல முயன்றதால் பாஸ்போர்ட் சட்டப்படி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இவர்கள் இலங்கைக்கு செல்ல இடைத்தரகர்களாக செயல்பட்ட 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story