பயிர் காப்பீடு தொகையை உடனே வழங்கக்கோரி ஏரி, ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பயிர் காப்பீடு தொகையை உடனே வழங்கக்கோரி ஏரி, ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விழுப்புரம்,
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நேற்று காலை தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு செஞ்சி ஒன்றிய தலைவர் முருகன் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். செஞ்சி ஒன்றிய அமைப்பாளர் பூபாலன் வரவேற்றார். மாநில தலைவர் விசுவநாதன் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளிலும் தூர்வாரி நீர்வரக்கூடிய கால்வாய்களை செப்பனிட வேண்டும், ஏரி ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும், வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு முறையான இழப்பீடு வழங்க வேண்டும், கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும், விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து நிலுவையில் உள்ள தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட தலைவர் குருசாமி, மாவட்ட அமைப்பாளர் இளையராஜா, ஒன்றிய அமைப்பாளர்கள் மாசிலாமணி, தயாநிதி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஒதியத்தூர் கிளை தலைவர் வெங்கடேசன் நன்றி கூறினார்.