கடலூர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக்கோரி காதில் பூச்சுற்றி போராட்டம் நடத்தியவர்களால் பரபரப்பு
சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக்கோரி காதில் பூச்சுற்றி கடலூர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர்.
கடலூர்,
கடலூர் ஜவான்பவன்– கம்மியம்பேட்டை இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டும். கடலூர்– நெல்லிக்குப்பம் மெயின்ரோடு செம்மண்டலத்தில் 4 வழிச்சாலை உள்ளது. இந்த சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும். கடலூர் முதுநகர் மீன்மார்க்கெட், இம்பீரியல் ரோடு உழவர் சந்தை ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அனைத்து பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும் அவர்களின் கோரிக்கை நிறைவேறவில்லை. கடந்த வாரம் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கடலூர் சப்–கலெக்டர் அலுவலகத்துக்கு அல்வாவுடன் சென்று மனு அளித்தனர். இந்நிலையில் நேற்று இந்த கோரிக்கைகளை இதுவரை அதிகாரிகள் நிறைவேற்றாமல் இருப்பதை கண்டித்தும், மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரியும் கடலூர் பீச் ரோட்டில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்துக்கு அனைத்து பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பினர் சென்றனர்.
பின்னர் அங்கு அவர்கள் காதில் பூ சுற்றியும், அபாய குறியீடு அடங்கிய அட்டையை சட்டையில் அணிந்தும் நூதன போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் வெண்புறா குமார் தலைமை தாங்கினார். இணை ஒருங்கிணைப்பாளர்கள் சிவாஜிகணேசன், குருராமலிங்கம், சுப்புராயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சையது முஸ்தபா உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நெடுஞ்சாலை துறைக்கு சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை இளநிலை வரை தொழில் அலுவலர் எழில்அரசனிடம் மனு அளித்தனர். மனுவை பெற்ற அவர் கோட்ட பொறியாளரிடம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.