கடலூர் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: வியாபாரிகள் சாலை மறியல்
கடலூர் பஸ்நிலையத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் நேற்று அதிரடியாக அகற்றப்பட்டது. நகராட்சி ஆணையாளரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சாலைமறியல் செய்தனர்.
கடலூர்,
கடலூர் நகரில் அமைந்துள்ள பஸ் நிலையம் வியாபாரிகளின் ஆக்கிரமிப்பில் சிக்கி தவித்தது. வியாபாரிகளுக்கு அரசியல் பின்னணி இருந்ததால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வந்தனர்.
பஸ் பயணிகளுக்கான காத்திருப்பு அறை மதுக்கூடமாக காட்சி அளித்தது. பிளாட்பாரத்தில் ஓட்டல்காரர்கள் சமையல் செய்த அவலம் அரங்கேறியது. இதனால் பயணிகள் நிற்கவும், இருக்கவும் இடமின்றி பஸ்கள் நிற்கும் இடத்தில் கும்பல், கும்பலாக வெயிலிலும், மழையிலும் நின்று கொண்டு இருந்த பரிதாப நிலையை காணமுடிந்தது.
இது பற்றி நகராட்சி ஆணையாளரான சரவணன் கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு சென்றார். இதையடுத்து ஆக்கிரமிப்பு வியாபாரிகளுக்கு நோட்டீசு கொடுத்து விட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு ஆணையாளர் சரவணனுக்கு கலெக்டர் தண்டபாணி உத்தரவிட்டார்.
அதன்படி பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்பு வியாபாரிகளுக்கு நேற்று முன்தினம் நகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீசு வழங்கப்பட்டது.
இதையடுத்து நேற்று காலை பஸ் நிலையத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கியது. இதற்காக நகராட்சி ஆணையாளர் சரவணன், இளநிலை பொறியாளர் ஜெயபிரகாஷ் நாராயணன், வருவாய் அதிகாரி சுகந்தி, சுகாதார ஆய்வாளர் திருப்பதி, பாக்கியநாதன் மற்றும் நகராட்சி சுகாதாரத்துறை தொழிலாளர்கள் பொக்லைன் எந்திரம், லாரி சகிதம் பஸ் நிலையத்தில் வந்தனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு வியாபாரிகளால் இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக துணை போலீஸ் சூப்பிரண்டு அகஸ்டின் ஜோசுவா லாமேக் தலைமையில் ஏராளமான போலீசாரும் பாதுகாப்பு பணிக்கு வந்திருந்தனர்
அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையை எதிர்பாராத வியாபாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் நுழையும் பகுதியில் நாகம்மன் கோவிலையொட்டி உள்ள செருப்புக்கடையில் இருந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கி பஸ் நிலையம் முழுவதும் நடந்தது.
முன்னாள் நகரசபை தலைவர் ஏ.ஜி.ராஜேந்திரனின் பழக்கடையையொட்டி உள்ள சந்து ஆக்கிரமிக்கப்பட்டு இருந்ததால் ஒற்றையடிப்பாதை போல இருந்தது, அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது ஏ.ஜி.ராஜேந்திரன் எதிர்ப்பு தெரிவித்து ஆணையாளர் சரவணனிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும் சந்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் கைப்பற்றி லாரியில் அள்ளிப்போட்டு நகராட்சி அலுவலகத்துக்கு எடுத்துசென்றனர்.
புதிய வணிக வளாகத்தில் உள்ள பிரபல இனிப்புகடையொன்றின் முன்பு அரை அடி உயரத்துக்கு பிளாட்பாரத்தை கட்டி தளஓடுகள் பதித்திருந்தனர். பொக்லைன் எந்திரம் மூலம் அதனை பெயர்த்தெடுத்து அகற்றினார்கள். பஸ்நிலையத்தின் மேற்கு பகுதியில் கடைக்கு ஒதுக்கப்பட்ட இடத்துக்கு வெளியே இருந்த அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டது. அதோடு கடைக்கு வெளியே இருந்த மின்விசிறிகள், விளக்குகள், கடைகளின் முகப்பில் இருந்த விளம்பர பலகைகள் அனைத்தும் அகற்றப்பட்டது. மேலும் தென்புற பிளாட்பாரத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டன.
நகராட்சி ஊழியர்கள் அகற்றினால் பொருட்களுக்கு சேதம் ஏற்படும் என்பதால் பல வியாபாரிகள் தங்கள் கடைகளின் ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றினார்கள். இதனால் பஸ்நிலைய பிளாட்பாரம் என்றும் இல்லாத அளவுக்கு விசாலமாக காட்சி அளித்தது. பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்றிய நகராட்சி ஆணையாளர் சரவணனின் நடவடிக்கையை பொதுமக்கள் வரவேற்றனர்.
ஆனால் ஆணையாளரின் நடவடிக்கைக்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து ஏ.ஜி.ஆர்.சுந்தர், ஏ.ஜி.சம்பத், ஏ.ஜி.தட்சணா ஆகியோர் தலைமையில் பஸ்கள் வெளியே செல்லும் நுழைவு வாயிலில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் வெளியில் இருந்து வந்த பஸ்கள் நிலையத்துக்குள் செல்ல முடியாமலும், உள்ளே இருந்த பஸ்கள் வெளியேற முடியாமலும் அணிவகுத்து நின்றன.
இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு அகஸ்டின் ஜோசுவா லாமேக் விரைந்து வந்து வியாபாரிகளிடம் பஸ் போக்குவரத்துக்கு இடையூறு செய்தால் கைது செய்வோம் என்று எச்சரித்தார். இதனால் வியாபாரிகள் சாலைமறியலை கைவிட்டு விட்டு ஒதுங்கி நின்றனர். இந்த மறியலால் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர் வியாபாரிகளின் கோரிக்கையை ஆணையாளர் சரவணன் கேட்டறிந்தார். இந்த போராட்டத்தால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி பாதிக்கப்படவில்லை. முழுமையாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
கடலூர் பஸ் நிலையத்தில் அதிரடியாக ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டது. இது பற்றி சிதம்பரத்தை சேர்ந்த பயணி கண்ணன் கூறுகையில், நான் அடிக்கடி சிதம்பரத்தில் இருந்து கடலூருக்கு வந்து செல்கிறேன். கடலூர் பஸ் நிலையத்தில் முன்பு பிளாட்பாரத்தில் பயணிகள் நிற்கக்கூட முடியாது, இப்போது பஸ் நிலையம் பயணிகளின் பஸ் நிலையமாக காட்சி அளிக்கிறது. இதே நிலையை தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்றார்.
கடலூரைச்சேர்ந்த கணேசன் என்பவர் கூறுகையில், பிளாட்பாரத்தில் உள்ள தூண்களுக்கு இடையே இருக்கைகள் போட்டால் வியாபாரிகள் மீண்டும் ஆக்கிரமிக்க வாய்ப்பு இருக்காது. அதேப்போல் பஸ் நிலையத்துக்குள் இருசக்கர வாகனங்களை நிறுத்த அனுமதிக்கக்கூடாது என்றார்.