ஊட்டி ஊராட்சி, ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
ஊட்டி ஊராட்சி, ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் தொட்டபெட்டா ஊராட்சி முத்தோரை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ.1.80 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட அங்கன்வாடி மையம், இத்தலார் ஊராட்சி எமரால்டு அரசு தொடக்கப்பள்ளியில் சமையலறை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள், இத்தலார் பகுதியில் ரூ.40 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு வரும் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம், முள்ளிகூர் ஊராட்சி எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் முதல்–அமைச்சரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் ஒரு ரூ.1.80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பசுமை வீடு ஆகியவற்றை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு மேற்கொண்டார்.
இதுபோல் பிரதான் மந்திரி ஆவாஷ் யோஜனா திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.1.70 லட்சம் மதிப்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.5.10 லட்சம் செலவில் இன்பசாகர் நகர் பகுதியில் கட்டப்பட்டு வரும் வீடுகள், முள்ளிகூர் ஊராட்சியில் தாய் திட்டத்தின் கீழ் ரூ.6.96 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட காந்திநகர் சாலை பணி, காந்திகண்டி பகுதியில் தாய் திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் செலவில் சாலை பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பசுபதி, ஊட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமன், நாகராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.