கோவை மில் ரோட்டில் கடையின் பூட்டை உடைத்து ரூ.12 லட்சம் திருட்டு


கோவை மில் ரோட்டில் கடையின் பூட்டை உடைத்து ரூ.12 லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 28 Jun 2018 4:00 AM IST (Updated: 28 Jun 2018 3:37 AM IST)
t-max-icont-min-icon

கோவை மில்ரோட்டில் கடையின் பூட்டை உடைத்து ரூ.12 லட்சத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கோவை,

கோவை சுக்கிரவார்பேட்டை பசுவண்ணன் கோவில் அருகே வசிப்பவர் தேவ்ராம். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர் மரக்கடை மில்ரோடு பகுதியில் இரும்புக்கடை (ஹார்டுவேர்ஸ்) நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் வழக்கம் போல் ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றனர். பின்னர் நேற்று காலை 9.30 மணிக்கு ஊழியர்கள் வேலைக்கு வந்தபோது கடையின் பக்கவாட்டில் உள்ள ‘கிரில் கேட்’ பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் கடை உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர். அவர் விரைந்து வந்து கடைக்குள் சென்று பார்த்தார். அப்போது மேஜையில் வைத்திருந்த ரூ.12 லட்சம் ரொக்கப்பணம் திருடுபோய் இருந்தது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் துணை போலீஸ் கமி‌ஷனர் பெருமாள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.

கடையில் திருட வந்த மர்ம நபர்கள் அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவில் உருவம் பதிவாகி விடக்கூடாது என்பதற்காக ஒயர்களை துண்டித்துவிட்டு திருடிச்சென்று உள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் கண்காணிப்பு கேமரா காட்சிகளை பதிவு செய்யும் கருவிகளையும் எடுத்துச்சென்றுள்ளனர்.

கடைக்கு முன்பகுதியில் உள்ள இரும்பு கேட்டை ரம்பத்தால் அறுத்த மர்ம நபர்கள் அதன் பின்னர் உள்பகுதியில் இருந்த கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பணத்தை திருடிச்சென்று உள்ளனர். வங்கியில் செலுத்துவதற்கான வைத்து இருந்த பணம்தான் திருடுபோய் உள்ளது. எனவே இதை அறிந்த நபர்கள்தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது.

எனவே கடை ஊழியர்கள் யாருக்காவது இந்த திருட்டில் தொடர்பு இருக்கிறதா? என்றும் போலீசார் விசாரணை நடைபெறுகிறது. திருட்டு நடந்த கடைக்கு கைரேகை நிபுணர்கள் சென்று தடயங்களை பதிவு செய்தனர். மோப்பநாய் கொண்டு வரப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. எப்போதும் ஆள்நடமாட்டம் மிகுந்த பகுதியில் இந்த திருட்டு சம்பவம் நடந்து இருப்பது வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story