பஸ் நிலையத்தில் மீண்டும் தள்ளுவண்டி கடைகள்: போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


பஸ் நிலையத்தில் மீண்டும் தள்ளுவண்டி கடைகள்: போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 28 Jun 2018 3:53 AM IST (Updated: 28 Jun 2018 3:53 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் உள்ள தள்ளுவண்டி கடைகளை போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்போவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் பஸ் நிலையத்தை விரிவாக்கும் பணிகள் ரூ.5 கோடி செலவில் நடந்து வருகிறது. இதற்காக கரூர் பஸ்கள் நிற்கும் இடத்தில் இருந்த கடைகள் இடித்து அகற்றப்பட்டது. அந்த இடத்தில் தற்போது கட்டிடம் கட்டும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதற்காக பஸ்கள் உள்நுழைதல் மற்றும் வெளியேறும் வழியும் மாற்றப்பட்டுள்ளது.

கட்டுமான பணிகள் நடப்பதால் பஸ்களை நிறுத்த போதிய இடவசதி இல்லாமல் நெருக்கடி ஏற்பட்டது. கட்டுமான பணி நடக்கும் இடத்தை சுற்றி ஏராளமான வியாபாரிகள் தள்ளுவண்டியில் கடை வைத்து பழங்கள், கடலை உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் இடநெருக்கடி ஏற்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர்.

பஸ் நிலைய விரிவாக்க பணிகள் தொடங்கியது முதல் அவ்வப்போது மாநகராட்சி அதிகாரிகள் தள்ளுவண்டி கடைகளை அகற்றி வருகின்றனர். ஆனால் அவர்கள் ஆக்கிரமிப்பை அகற்றிய சில மணி நேரங்களிலேயே அதே இடத்தில் மீண்டும் கடைகள் அமைத்துவிடுகின்றனர். இது வாடிக்கையாக நடந்து வருகிறது. இந்தநிலையில் பஸ் நிலையத்தில் உள்ள கட்டிட கழிவுகளை அகற்றிவிட்டு அதில் பஸ்களை நிறுத்த முடிவு செய்யப்பட்டது.

அதனை சுற்றி தள்ளுவண்டி கடைகள் இருந்ததால், நேற்று முன்தினம் மாநகராட்சி அதிகாரிகள் அவற்றை அகற்றினர். ஆனால் இரவில் அதே இடத்தில் மீண்டும் கடைகளை வைத்தனர். இந்தநிலையில் நேற்று காலையில் மாநகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் தள்ளுவண்டி கடைகளை அகற்றினர். இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் கட்டிட கழிவுகள் அகற்றப்பட்டு, அந்த இடத்தில் பஸ்கள் நிறுத்தப்பட்டது.

மாநகராட்சி அதிகாரிகள் தள்ளுவண்டி கடைகளை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வியாபாரிகள் போராட்டம் நடத்தப்போவதாக கண்ணீர் மல்க தெரிவித்தனர். இதுகுறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:–

ஆரோக்கியசாமி:– நான் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் சுமார் 40 வருடங்களாக ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, மாதுளை உள்ளிட்ட பழங்களை தள்ளுவண்டியில் வைத்து விற்பனை செய்து வருகிறேன். தற்போது பஸ்நிலையத்தில் கடை வைக்கக்கூடாது என்று மாநகராட்சி அதிகாரிகள், தள்ளுவண்டி கடைகளை அப்புறப்படுத்துகின்றனர். இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. பஸ் நிலையத்தை விட்டு வேறு எந்த பகுதிக்கும் எங்களால் செல்ல முடியாது.

மணி:–நான் பஸ் நிலையத்தில் சாலையோரத்தில் தள்ளுவண்டியில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறேன். மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டுமே வியாபாரம் செய்கிறேன். இதனால் எந்த பாதிப்பும் இல்லை. நேற்று மாநகராட்சி அதிகாரிகள் வந்து என்னுடைய தள்ளுவண்டி மற்றும் அதில் இருந்த பொருட்களை தூக்கி சென்றுவிட்டனர். மேலும் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளை ஏலம் எடுக்கும் நபர், அதனை வேறு நபருக்கு குத்தகைக்கு விடுகிறார். அவர், தள்ளுவண்டி கடை வைத்திருக்கும் வியாபாரிகளிடம் தினமும் ரூ.100–ம், தலைச்சுமையாக வியாபாரம் செய்பவர்களிடம் ரூ.50–ம் வசூல் செய்கின்றார். இதனை தடுக்க வேண்டும். தள்ளுவண்டி வியாபாரிகளுக்காக பஸ் நிலைய பகுதியில் தனியாக ஒரு இடம் ஒதுக்க வேண்டும். அதற்கு மாநகராட்சி சார்பாக தினசரியோ அல்லது மாதத்துக்கு ஒரு முறையோ கட்டணம் வசூலித்தால் மாநகராட்சிக்கு வருமானமும் கிடைக்கும்.

சாந்திமேரி:– நான் தள்ளுவண்டியில் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறேன். 5 வயது முதல் பஸ் நிலையத்தில் பழ வியாபாரம் செய்கிறேன். தற்போது வியாபாரம் செய்யக்கூடாது என்றால் நாங்கள் என்ன செய்வது?. இதில் வரும் வருமானத்தை வைத்து தான் குழந்தைகளை படிக்க வைக்கிறோம். மேலும் வட்டிக்கு பணம் வாங்கி தான் வியாபாரம் செய்கிறோம். பஸ் நிலையத்துக்கு பயணிகள் அதிகமாக வருவதால் ஓரளவுக்கு வியாபாரம் ஆகிறது. வேறு இடத்தில் கடை வைத்தால் வட்டி கூட கட்ட முடியாது. பஸ் நிலைய விரிவாக்க பணியை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் பணிகள் முடிந்ததும், தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு என்று தனியாக இடம் ஒதுக்கு வேண்டும். வேறு எங்கு இடம் ஒதுக்கினாலும் அங்கு நாங்கள் செல்ல மாட்டோம்.

கிளாரா:– எனது பெற்றோரும் இங்கு தான் வியாபாரம் செய்தனர். பஸ் நிலையம் தொடங்கப்பட்டது முதல் இங்கு தான் வியாபாரம் செய்து வருகிறேன். இங்கு மாற்றுத்திறனாளிகளும் தள்ளுவண்டியில் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள். கடைசி வரை பஸ் நிலையத்தில் தான் வியாபாரம் செய்வோம். மீண்டும் கடைகளை அமைப்போம். அதனை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினால் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்துவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, பஸ் நிலையத்தில் சுமார் 50 பேர் தள்ளுவண்டிகளில் கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதுவரை மாநகராட்சி சார்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மக்கள்தொகை பெருக்கம் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால் பஸ் நிலையத்தில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதற்காக தான் தற்போது விரிவாக்க பணிகள் நடக்கிறது. இடநெருக்கடியை குறைக்கவே தள்ளுவண்டி கடைகளை அகற்றி வருகிறோம். அவர்களுக்கு வேறு இடம் ஒதுக்கி தரப்படும். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வியாபாரிகள் முன்வர வேண்டும், என்றார்.


Next Story