சுத்திகரிப்பு செய்யாமல் கழிவுநீரை வெளியேற்றும் சாய–தோல் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்


சுத்திகரிப்பு செய்யாமல் கழிவுநீரை வெளியேற்றும் சாய–தோல் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 28 Jun 2018 4:30 AM IST (Updated: 28 Jun 2018 4:02 AM IST)
t-max-icont-min-icon

சுத்திகரிப்பு செய்யாமல் கழிவுநீரை வெளியேற்றும் சாய மற்றும் தோல் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மக்கள் முன்னேற்ற கழக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

ஈரோடு,

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் அ.செல்வராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மயில்துரையன், மாவட்ட நிர்வாகிகள் குமரேஷ், குணசேகரன், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

* ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோதமாக நடைபெற்றுவந்த லாட்டரி மற்றும் மது விற்பனையை முற்றிலும் தடை செய்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு நன்றி.

* பவானி ஆற்றில் மணல் கடத்தலை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* வருகிற 3, 4–ந் தேதி ஈரோடு மாவட்டத்துக்கு வருமை தரும் நிறுவன தலைவர் பெ.ஜான்பாண்டியனுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது. மேலும் 50–க்கும் மேற்பட்ட இடங்களில் கட்சி கொடி ஏற்றி வைத்து பெயர் பலகை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்குவது. ஜூலை 15–ந் தேதி தஞ்சையில் நடைபெறும் மாநில மாநாட்டிற்கு ஈரோட்டில் இருந்து 50 வாகனங்களில் செல்ல வேண்டும்.

* ஈரோட்டில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்டு மோசமாக உள்ள ரோடுகளை சீரமைக்க வேண்டும். பூம் பூம் மாட்டுக்காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

* ஈரோடு நரிப்பள்ளம், அக்ரஹாரம், சூரம்பட்டி, கங்காபுரம், வெண்டிபாளையம், சித்தோடு, வெட்டுக்காட்டுவலசு, தண்ணீர்பந்தல்பாளையம், பிச்சைக்காரன்பாளையம், காடையம்பட்டி, சூளை, மாணிக்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் சாய மற்றும் தோல் தொழிற்சாலைகள் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றி வருகிறது. சம்பந்தப்பட்ட ஆலைகள் மீது மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* பெருந்துறை சிப்காட் பகுதியில் செயல்பட்டு வரும் சாய ஆலைகளால் நீர் முற்றிலும் மாசு அடைந்துள்ளது. மேலும் இந்த பகுதியில் புற்றுநோயால் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கு காரணமான சாய ஆலைகளை நிரந்தரமாக மூடுவதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணமும் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாவட்ட நிர்வாகிகள் ராமு, பூபதி, துரைசாமி, மகளிர் அணி நிர்வாகிகள் சத்யா, நித்யா, அன்னக்கொடி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.


Next Story