போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்


போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
x
தினத்தந்தி 28 Jun 2018 4:13 AM IST (Updated: 28 Jun 2018 4:13 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மற்றும் காரைக்குடி பகுதிகளில் போதைப் பொருள் தடுப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு மற்றும் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் சர்வதேச போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தல் எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம், கருத்தரங்கு சிவகங்கையை அடுத்த நாட்டரசன்கோட்டையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் ஆகியோர் விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

ஊர்வலத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் மங்களேஸ்வரன், முருகேசன், ராமகிருஷ்ணன் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயலாளர் சுப்பையா, பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் சுப்பிரமணியன், பள்ளி தலைமையாசிரியை சிட்டு, போதைப் பொருள் நுண்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி, பேரூராட்சி செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட தலைவர் பகீரத நாச்சியப்பன், மன வளக் கலை மன்றச் செயலாளர் ராமமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மாநில அளவில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற நாட்டரசன்கோட்டை பள்ளி மாணவ–மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதேபோல் சிவங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியில் உலக போதைப்பொருள் ஒழிப்பு தின நிகழ்ச்சி பள்ளி செயலர் சேகர் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில் மாணவர்கள் போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தும் வகையில் வட்ட வடிவில் நின்று உறுதிமொழி எடுத்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர் முத்துக்குமார் தலைமையில் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் சார்பில் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். காரைக்குடி தேவகி மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் சுரேந்திரன் சிறப்புரையாற்றினார். ஊர்வலத்தில் கல்லூரி மாணவ–மாணவிகள், பல்கலைக்கழக பதிவாளர் குரு மல்லேஷ் பிரபு, பேராசிரியர்கள் பழனிச்சாமி, மகேஷ், ஈஸ்வரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் காரைக்குடி அருகே உள்ள மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. பள்ளியின் தேசிய மாணவர் படை மாணவர்கள், பள்ளி மாணவ–மாணவிகள், ஆசிரியர்கள், காரைக்குடி அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், நாச்சியார்புரம் போலீசார், இளங்குடி கிராமத்தினர் கலந்து கொண்டனர்.

விழிப்புணர்வு ஊர்வலத்தை பள்ளியின் தலைவர் குமரேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் அபிராமி, திருப்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா, இளங்குடி கிராம நிர்வாக அலுவலர் நல்லழகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன.

மேலும் செட்டிநாடு பள்ளி மாணவர்களின் சார்பில் விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டு போதைப் பொருள் ஒழிப்பு உறுதி மொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் ரமேஷ் தலைமையில் பள்ளி தேசிய மாணவர் படை அலுவலர் ஸ்டீபன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். காரைக்குடி என்.சி.சி. 9–வது பட்டாலியன் மாணவர்கள் சார்பில் காரைக்குடி அழகப்பா உடற்கல்வியில் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு என்.சி.சி கமாண்டிங் ஆபீசர் கர்னல் அஜய்ஜோசி தலைமை தாங்கினார். துணை கமாண்டிங் ஆபீசர் கே.ஆர்.ரெட்டி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் என்.சி.சி அதிகாரிகள் கேப்டன் ஜெயக்குமார், கவிப்பிரியா மற்றும் என்.சி.சி மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story