வாக்குச் சாவடிகள் மறுசீரமைப்புப் பணி: அரசியல் கட்சியினர் கருத்துக்களை தெரிவிக்கலாம்
வாக்குச் சாவடிகளை மறு சீரமைக்கும் பணி நடைபெறவுள்ளதால் அரசியல் கட்சியினர் வருகிற ஜூலை 9–ந்தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் (பொறுப்பு) தெரிவித்துள்ளார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் வாக்குச் சாவடிகளை மறு சீரமைக்கும் பணி நடைபெறவுள்ளதால் இது தொடர்பான கருத்துக்களை அரசியல் கட்சியினர் வருகிற ஜூலை 9–ந்தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் (பொறுப்பு) இளங்கோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:–
1.1.2019ஐ தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல்களை தீவிர திருத்தம் செய்யும் பணி செப்டம்பர் 1–ந்தேதி முதல் நடைபெற உள்ளது.
அதன் ஒரு பகுதியாக தற்போது உள்ள வாக்குச்சாவடிகளை மறுசீரமைப்பு செய்வது தொடர்பான பணிகள் கடந்த 21–ந்தேதி தொடங்கி ஜூலை 1–ந்தேதி வரை நடைபெறுகிறது.
அதன் அடிப்படையில் நகர்ப்புற பகுதியில் 1400–க்கு மேல் உள்ள வாக்காளர்களை கொண்ட வாக்குச் சாவடிகளையும், மற்றும் ஊரகப் பகுதியில் 1200–க்கு மேல் உள்ள வாக்காளர்களை கொண்ட வாக்குச் சாவடிகளையும் தனித்தனியாக அமைக்கும் பணி மற்றும் பழுதடைந்த வாக்குச் சாவடிகளை புதிய இடத்திற்கு மாறுதல் செய்யும் பணியும் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டு உள்ளது.
மேலும் வரைவு வாக்குச் சாவடி பட்டியல் வருகிற ஜூலை 2–ந்தேதி அன்று வெளியிடப்பட உள்ளது. இது தொடர்பாக தங்களது கருத்துக்களை ஜூலை 9–ந்தேதி அளிக்குமாறு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் இதர தரப்பினர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.