முழு நிலவு நாள் கொண்டாட்டம்: கணவரின் ஆயுளுக்காக பெண்கள் வழிபாடு


முழு நிலவு நாள் கொண்டாட்டம்: கணவரின் ஆயுளுக்காக பெண்கள் வழிபாடு
x
தினத்தந்தி 28 Jun 2018 4:25 AM IST (Updated: 28 Jun 2018 4:25 AM IST)
t-max-icont-min-icon

மும்பை உள்பட மாநிலம் முழுவதும் முழு நிலவு நாள் கொண்டாட் டத்தையொட்டி கணவரின் ஆயுளுக்காக பெண்கள் வழிபாடு செய்தனர்.

மும்பை,

வட இந்திய பெண்கள் ஆண்டு தோறும் ‘வட் பூர்ணிமா’ திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். ‘முழு நிலவு நாள்’ திருவிழாவாக கொண்டாடப்படும் இந்த நாளில் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் அதிகரிக்கவும், அவர் நல்ல உடல் நலத்துடன் வாழவும் இறைவனை வழிபடுகின்றனர்.

சாவித்திரி என்ற பெண் உயிர் இழந்த தன் கணவன் சத்யவானை தனது பதிபக்தியால் எமனிடம் இருந்து காப்பாற்றினாள் என புராணம் கூறுகிறது. அதை நினைவுபடுத்தும் வகையில் வட் பூர்ணிமா திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா மராட்டியம், குஜராத் போன்ற மாநிலங்களில் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

நேற்று மராட்டிய மாநிலம் முழுவதும் ‘வட் பூர்ணிமா’ எனப்படும் முழுநிலவு திருவிழா வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருமணமான பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் அதிகரிக்க நேற்று உணவு ஏதும் உண்ணாமல் நோன்பு இருந்தனர். கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்தனர்.

பின்னர் தங்கள் கணவர் நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டி அவர்கள் குழுவாக ஆலமரத்தில் நூலை சுற்றினர். மேலும் ஒருவருக்கொருவர் குங்கும திலகமிட்டு கொண்டனர். இந்த நிலையில், புனே பிம்பிரி -சிஞ்ச்வட், அவுரங்காபாத் ஆகிய இடங்களில் தங்களது மனைவி நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டி ஆண்கள் ஆலமரத்தில் நூலை சுற்றினர். இது அனைவரையும் கவர்ந்தது.

மும்பையில் தாராவி, காட்கோபர், தாதர், அந்தேரி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ‘வட் பூர்ணிமா’ திருவிழா வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதுபோன்று தானே, நவிமும்பை, வாஷி பகுதிகளிலும் முழுநிலவு திருவிழாவை திருமணமான பெண்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Next Story