உச்சிப்புளி கடற்கரைக்கு படகில் வந்த இலங்கை வாலிபர் கைது 2 பேர் தப்பி ஓட்டம்


உச்சிப்புளி கடற்கரைக்கு படகில் வந்த இலங்கை வாலிபர் கைது 2 பேர் தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 28 Jun 2018 4:45 AM IST (Updated: 28 Jun 2018 4:26 AM IST)
t-max-icont-min-icon

உச்சிப்புளி கடற்கரைக்கு படகில் வந்த இலங்கை வாலிபர் கைது செய்யப்பட்டார். அவருடன் வந்த 2 பேர் தப்பி ஓடி விட்டனர்.

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ளது தாமரைக்குளம். இப்பகுதிக்கும், இலங்கைக்கும் இடைப்பட்ட தூரம் குறைவாக இருப்பதால் கடந்த காலங்களில் இலங்கையில் இருந்து அகதிகளாக வருபவர்கள் இங்கு வந்து கியூ பிரிவு போலீசாரின் விசாரணைக்கு பிறகு மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் மர்ம படகு ஒன்று இலங்கையில் இருந்து உச்சிப்புளி வலங்காபுரி கடற்கரைக்கு வர உள்ளதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. உடனே கியூ பிரிவு போலீசார் கடற்கரையில் கண்காணித்தனர். அப்போது கரையை நோக்கி பைபர் படகு வந்தது. அதில் இருந்து 3 வாலிபர்கள் இறங்கினர். கியூ பிரிவு போலீசார் விரைந்து சென்று அவர்களில் ஒருவரை மடக்கி பிடித்தனர். 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

பிடிபட்டவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் இலங்கை தலைமன்னார் பகுதியை சேர்ந்த ஸ்டீபன் சகாய பஸ்டியன் டயஸ் என்ற காண்டீபன் (வயது 35) என்பதும், உடன் வந்தவர்கள் அரவிந்த், பாக்கியம் என்ற பெனடிக் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து காண்டீபனை கைது செய்த போலீசார், இவர்கள் எதற்காக இங்கு வந்தார்கள்? என தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தங்கச்சிமடம் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டு இருந்த ஏராளமான வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் தற்போது இலங்கையை சேர்ந்த 3 பேர் இப்பகுதிக்கு வந்தது கடல் மார்க்கத்தில் சட்டவிரோதமான தொடர்பு இப்போதும் தொடருகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


Next Story