தேனீக்கள் ஓர் அபூர்வம்
காவல்காரத் தேனீக்கள் தான் கூட்டை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கின்றன.
ஒரு தேன் கூட்டில் ஒரு ராணித் தேனீ, 250 ஆண் தேனீக்கள், 80 ஆயிரம் வேலைக்காரத் தேனீக்கள் இருக்கும். ராணித் தேனீதான் அந்த கூட்டத்திற்கு தலைவி. முட்டை யிடுவதும் வேலைக்காரத் தேனீக்களுக்கு கட்டளை இடுவதும் தான் இதன் வேலை. கூட்டில் இருக்கும் 250 ஆண் தேனீக்களுக்கும் எந்த வேலையும் கிடையாது. இவற்றின் ஒரே பிரதான வேலை இனச்சேர்க்கை மட்டும்தான். 80 ஆயிரம் வேலைக்காரத் தேனீக்களும் பெண்ணுறுப்பு முழுமையாக வளர்ச்சியடையாத பெண் தேனீக்கள்தான். இதனால் முட்டையிட முடியாது. எனவே இவை எப்போதும் வேலைக்காரத் தேனீக்களாகவே இருக்கும்.
ராணித் தேனீ தன் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே இனச்சேர்க்கையில் ஈடுபடும். மூன்று முதல் நான்கு நாள் தொடர்ந்தாற்போல் இந்த செயல் நிகழும். அதன்பின் ராணித் தேனீ வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து முட்டையிட்டுக்கொண்டே இருக்கும். அந்த முட்டையிலிருந்து 13 நாட்களில் தேனீக்கள் பொரித்து வெளிவரும். பிறந்து ஒரு வாரம் ஆன தேனீக்களுக்கு கூட்டை சுத்தப்படுத்துவதுதான் வேலை. இந்த வகை தேனீக்களை ‘ஹவுஸ் கீப்பிங் பீஸ்‘ என்கிறார்கள். இந்த பிஞ்சுத் தேனீக்கள் வெளியில் சென்று தேன் எடுத்துவரும் மற்ற பெரிய தேனீக்களிடம் இருந்து தேனை வாங்கி கூட்டில் இருக்கும் லார்வா என்ற புழுக்களுக்கும், மற்ற தேனீக்களுக்கும் தேவையான அளவு கொடுக்கும். மீதம் இருக்கும் தேனை எதிர்கால தேவைக்காக சேர்த்து வைக்கும்.
இதுபோக காவல்காரத் தேனீக்கள் இருக்கின்றன. இவை தான் கூட்டை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கின்றன. மனிதர்களைப் போலவே தேனீக்களிலும் திருடர்கள் உண்டு. ஒரு கூட்டில் இருக்கும் தேனீ மற்றொரு கூட்டுக்குள் நுழைந்து அங்கு சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தேனை திருடிச் சென்று விடும். அத்தகைய தேனீக்களை அடையாளம் கண்டு அவற்றோடு போரிட்டு விரட்டி அடிப்பதோ அல்லது கொன்று விடுவதோ காவல்காரத் தேனீக்களின் வேலை. தேன் கூட்டிலிருந்து தேனை எடுக்கும்போது நம்மைக் கொட்டுவதும் காவல்காரத் தேனீக்கள்தான்.
தேனீக்கள் 90 நாட்கள் வரை உயிர்வாழக் கூடியவை. இதில் முதல் 7 நாட்கள் ஆன தேனீக்கள் கூட்டைச் சுத்தம் செய்யும் வேலையை செய்கின்றன. 7 நாட்களுக்கு மேல் வயதான தேனீக்கள் மலர்களில் இருந்து தேனை சேகரித்து வரும் வேலையைப்பார்க்கின்றன. 55 நாட்களுக்கு மேல் உள்ள வயதான தேனீக்கள் அந்த பகுதியில் எங்கெங்கு தேன் கிடைக்கும், மலர்கள் நிறைந்த இடங்கள் எங்கிருக்கின்றன என்ற தகவலை வேலைக்காரத் தேனீக்களுக்கு தெரிவிக்கும். அனுபவம் நிறைந்த இந்த வயதான தேனீக்கள் கூறும் தகவலை வைத்தே தேனீக்கள் தேனை சேகரித்து வருகின்றன.
Related Tags :
Next Story