தூத்துக்குடியில் பதிவு செய்யாத விசைப்படகுகளை மீன்பிடிக்க அனுமதிக்க கூடாது கலெக்டரிடம் நாட்டுப்படகு மீனவர்கள் மனு


தூத்துக்குடியில் பதிவு செய்யாத விசைப்படகுகளை மீன்பிடிக்க அனுமதிக்க கூடாது  கலெக்டரிடம் நாட்டுப்படகு மீனவர்கள் மனு
x
தினத்தந்தி 29 Jun 2018 3:00 AM IST (Updated: 28 Jun 2018 6:19 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பதிவு செய்யப்படாத விசைப்படகுகளை மீன்பிடிக்க அனுமதிக்க கூடாது என்று நாட்டுப்படகு மீனவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் பதிவு செய்யப்படாத விசைப்படகுகளை மீன்பிடிக்க அனுமதிக்க கூடாது என்று நாட்டுப்படகு மீனவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

விசைப்படகுகள்

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள விசைப்படகுகளில் 71 படகுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 150–க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்படாத விசைப்படகுகள் உள்ளன. பதிவு செய்யாத படகுகள் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு மீன்பிடி தொழிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் இந்த படகுகள் மீன்பிடி தொழிலுக்கு சென்றன. இதனால் பதிவு செய்யாமல் மீன்பிடி தொழிலுக்கு சென்ற படகு உரிமையாளர்களுக்கு மீன்வளத்துறையினர் நோட்டீசு கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் பதிவு செய்யாத படகுகள் கடலுக்கு செல்ல அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்தி நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லாமல் திடீர் போராட்டம் நடத்தினர்.

கலெக்டரிடம் மனு

தொடர்ந்து தூத்துக்குடி நாட்டுப்படகு, கட்டுமர மீனவர் சங்க தலைவர் கயாஸ் தலைமையில் 27 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் நேற்று காலை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் சந்தீப் நந்தூரியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அப்போது, தூத்துக்குடியில் பதிவு செய்யாத விசைப்படகுகள் கடலுக்கு செல்வதால் நாட்டுப்படகு மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆகையால் பதிவு செய்யாத விசைப்படகுகள், 240 எச்.பி.க்கு அதிகமாக மோட்டார் திறன் கொண்ட விசைப்படகுகளை கடலுக்கு செல்ல அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்தி உள்ளனர்.

அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா, மீன்வளத்துறை இணை இயக்குனர் அமல்சேவியர், தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், துணை போலீஸ் சூப்பிரண்டு ரவி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story