குருசடை தீவு பகுதியில் சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் கேமராக்கள் செல்போனில் கண்காணிப்பு பணி


குருசடை தீவு பகுதியில் சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் கேமராக்கள் செல்போனில் கண்காணிப்பு பணி
x
தினத்தந்தி 29 Jun 2018 3:45 AM IST (Updated: 28 Jun 2018 11:29 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டம் குருசடை தீவு பகுதியில் சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரம் செல்போனில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல்பகுதியில் அமைந்துள்ள குருசடை தீவு பகுதியில் சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரம் செல்போனில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல்பகுதியில் வான்தீவு, முல்லை தீவு, நல்ல தண்ணீர் தீவு, குருசடை தீவு, மணோலி தீவு, வாழைதீவு, தலையாரிதீவு, அப்பாதீவு, முயல்தீவு, விலாங்குசல்லிதீவு உள்ளிட்ட 21 குட்டி தீவுகள் உள்ளன. இந்த தீவுகளை உள்ளடக்கிய பகுதிகளை மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகம் அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது.

இந்த தீவுகளில் அரிய வகை மூலிகை தாவரங்களும், சில பறவை இனங்களும் உள்ளன. ஆரம்ப காலத்தில் இந்த தீவுகளை மீனவர்கள் தங்களின் ஓய்விடமாக பயன்படுத்தி வந்த நிலையில் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகம் அமைக்கப்பட்ட பின்னர் தடைசெய்யப்பட்ட பகுதியாகிவிட்டது இந்த தீவுகள். மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தீவுகளை சுற்றிலும் இயற்கையாகவே அமைந்துள்ள பவளப்பாறைகள் இயற்கை அரணாக அமைந்து சுனாமி தாக்குதலை சமாளித்தது குறிப்பிடத்தக்கது.

பவளப்பாறைகள் மீன்களின் இனப்பெருக்கத்திற்கு சிறந்த இடமாக திகழ்ந்ததால் தீவுகளை சுற்றிலும் பவளப்பாறைகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தீவுகளில் அன்னியர் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், தடைசெய்யப்பட்ட கடல்வாழ் உயிரினங்களை தீவுபகுதிகளில் பிடிப்பதை தடுக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுஉள்ளது.

இதன் முதல்கட்டமாக குருசடை தீவு பகுதியில் பாதுகாப்பினை பலப்படுத்த அரசு வனத்துறை மூலம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுஉள்ளது. இதன்படி குருசடை தீவு பகுதியில் சூரியஒளி மின் தகடுகள் பொருத்தப்பட்டு சூரிய ஒளி மின் வசதி செய்யப்பட்டுஉள்ளது. இரவு நேரங்களில் வேட்டை தடுப்பு காவலர்கள் தங்கிஇருந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட வசதியாக இந்த மின் வசதி செய்து கொடுக்கப்பட்டுஉள்ளது.

மேலும், தீவுகளுக்குள் அன்னியர் ஊடுருவலை கண்காணித்து தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ரூ.2 லட்சம் செலவில் சூரியஒளி மின் வசதியுடன் இந்த கண்காணிப்பு கேமராக்கள் தீவுகளின் முக்கிய பகுதியில் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதற்காக அங்கு இணைய வசதி ஏற்படுத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுஉள்ளது.

வனபாதுகாவலர், வனவர்கள், வனச்சரகர்கள் தங்களின் செல்போன்களில் இங்கிருந்தவாறே குருசடை தீவு பகுதியை கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 5 ஆயிரத்து 193 மீட்டர் சுற்றளவில் 65.80எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த குருசடை தீவு பகுதியில் அரிய வகை மாங்குரோவ் காடுகளும், பூவரசு மரங்களும் உள்ளன. மேலும், தீவினை சுற்றிலும் அபூர்வ பவளப்பாறைகள் அடர்ந்து வளர்ந்துள்ளன.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த குருசடை தீவு பகுதி முழுவதும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.இதன் தொடர்ச்சியாக நல்ல தண்ணீர் தீவு பகுதியிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக வன பாதுகாவலர் அசோக்குமார் தெரிவித்தார். அப்போது வனச்சரகர்கள் சிக்கந்தர்பாட்சா, ரகுவரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story