விருதுநகர் மாவட்டத்தில் ஊராட்சி அலுவலகங்களிலும் இ-சேவை மையம்


விருதுநகர் மாவட்டத்தில் ஊராட்சி அலுவலகங்களிலும் இ-சேவை மையம்
x
தினத்தந்தி 29 Jun 2018 12:54 AM IST (Updated: 29 Jun 2018 12:54 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் 450 ஊராட்சி அலுவலகங்களில் இ-சேவை மையம் விரைவில் செயல்பட இருக்கிறது.

விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் 450 ஊராட்சி அலுவலகங்களில் இ-சேவை மையம் விரைவில் செயல்பட இருக்கிறது.

விருதுநகர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தில் அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள் மற்றும் எண்ணெய்வித்து விதைகள் போதுமான அளவில் இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

நுண்ணீர் பாசனத் திட்டத்திற்கு ரூ.8.5 கோடி நிதி ஒதுக்கீடு வரப்பெற்றுள்ளதால் பயிர் பரப்பு மற்றும் உற்பத்தியை அதிகரித்திடும் பொருட்டு திட்டத்தினை முழு அளவில் செயலாக்கம் செய்திட விவசாயிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. சிறு,குறு விவசாயிகள் சான்றினை தடையின்றி விரைவாக பெறுவதற்கு ஏதுவாக அனைத்து தாசில்தார் அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என அதிகாரிகள் குறிப்பிட்டனர்

இ-சேவை மையங்கள் மூலம் சிறு,குறு விவசாயிகள் சான்று உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களையும் சிரமம் இன்றி பெறும் வகையில் மையங்களில் உள்ள தொழில்நுட்ப குறைபாடுகள் உடன் சீர் செய்யப்படும் என்றும் வட்டார அலுவலகங்கள் தவிர மேலும் 450 ஊராட்சி அலுவலகங்களிலும் இ-சேவை மையம் அமைக்கப்படும் என்றும் கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வைப்பாறு வடிநில உபகோட்டத்தினை சார்ந்த 33 கண்மாய்கள், மேல்வைப்பாறு வடிநில உபகோட்டத்தினை சார்ந்த 23 கண்மாய்கள் மற்றும் குண்டாறு வடிநில உபகோட்டத்தினை சார்ந்த 3 கண்மாய்கள் ஆக மொத்தம் 59 கண்மாய்கள் மராமத்து செய்யப்படும் என்று கலெக்டர் கூறினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் ஆனந்தகுமார், வேளாண்மை இணை இயக்குனர் சுப்பிரமணியன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் மணிசேகரன், தோட்டக்கலை துணை இயக்குனர் (பொறுப்பு) பூபதி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் முருகன் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story