ராஜஸ்தான் மாநிலத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்


ராஜஸ்தான் மாநிலத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்
x
தினத்தந்தி 29 Jun 2018 4:45 AM IST (Updated: 29 Jun 2018 1:30 AM IST)
t-max-icont-min-icon

ராஜஸ்தான் மாநிலத்தில் வைத்து தங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று கோவை, திருப்பூரை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

திருப்பூர்,

ராஜஸ்தான் மாநிலத்தில் வைத்து தங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று கோவை, திருப்பூரை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

கோவை, சோமனூர், திருப்பூர் பகுதியை சேர்ந்த 3 ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏராளமானோர் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

கடந்த 22-ந்தேதி ராஜஸ்தான் மாநிலம் பார்மார் மாவட்டத்தில் எங்களுடன் காடா துணி வியாபாரம் செய்து வரும் அம்ரித்லால் என்பவரின் மகள் திருமணத்திற்கு சென்றிருந்தோம். அப்போது சோமனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள எங்களிடம் இருந்தும், மேலும் பலரிடமும் காடா துணிகளை வாங்கிக்கொண்டு பணம் தராமல் தலைமறைவாகி விட்ட வீரேந்திரா டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் கவுதம் என்பவரின் வீடு அங்குள்ள ஜோர்தான் என்ற இடத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது. எனவே அவரின் வீட்டிற்கு சென்று தரவேண்டிய தொகை குறித்து விசாரித்தோம். ஆனால் அந்த நபர் வீட்டில் இல்லை.

இதையடுத்து அவருடைய குடும்ப உறுப்பினர்களிடம் தகவல்களை தெரிவித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டோம். இதையடுத்து 23-ந்தேதி காலை அகமதாபாத் துணி மார்க்கெட் செல்வதற்காக அங்கிருந்து புறப்பட்டோம். சிறிது தூரம் சென்ற போது ஒரு காரில் வந்த சிலர் எங்களை வழிமறித்தனர். அவர்கள் துப்பாக்கி மற்றும் இரும்பு கம்பிகள், தடிகள் உள்ளிட்டவைகளை வைத்து எங்களை கொலை செய்யும் நோக்கில் அடித்து, உதைத்தனர். அப்போது அந்த வழியாக ராணுவ வாகனம் ஒன்று வந்ததால், எங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் எங்களுடைய வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பினர்.

பின்னர் நண்பர்களின் உதவியால் அங்கிருந்து தமிழகம் வந்த நாங்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றோம். கவுதம் ஆள் அனுப்பி எங்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. இந்த தாக்குதல் தமிழ்நாட்டு டெக்ஸ்டைல் உரிமையாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட தாக்குதலாகும். இந்த சம்பவம் இரு மாநில மக்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாகவும், வியாபார தொடர்புகளை சீர்குலைக்கும் விதமாகவும் உள்ளது. இதனால் இதுபோன்ற சம்பவங்கள் மேலும் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுப்பதுடன், எங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story