8 வழி பசுமைச்சாலைக்காக நிலம் அளவீடு பணி போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது


8 வழி பசுமைச்சாலைக்காக நிலம் அளவீடு பணி போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது
x
தினத்தந்தி 29 Jun 2018 4:30 AM IST (Updated: 29 Jun 2018 3:06 AM IST)
t-max-icont-min-icon

8 வழி பசுமைச்சாலைக்காக தொரப்பாடி, நரசிங்கநல்லூர் பகுதியில் போலீஸ் பாதுகாப்புடன் நிலம் அளவீடு பணி நடந்தது.

செங்கம்,

சேலம் - சென்னை இடையே 8 வழி பசுமைச்சாலை அமைக்க நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, நிலம் அளவீடு செய்து கற்கள் நடப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் செங்கம் அருகே உள்ள செ.நாச்சிப்பட்டு கிராமத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்றது. அப்போது பெண்கள் மற்றும் விவசாயிகள் சிலர் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் இருந்து மண்எண்ணெய் கேனை பிடுங்கினர். பின்னர் அவர்களை குண்டு கட்டாக தூக்கி வந்து அப்புறப்படுத்தினர்.

இந்த நிலையில் நேற்று தொரப்பாடி, நரசிங்கநல்லூர் பகுதிகளில் பசுமைச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதற்காக நிலம் அளவீடு பணி போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.

செங்கத்தை அடுத்த கட்டமடுவு கிராமத்தில் நிலம் அளவீடு பணி நடைபெற்றது. அப்போது அங்கு வைக்கப்பட்டு இருந்த அளவீடு கல்லை விவசாயிகள் பிடுங்கினர். இதையடுத்து போலீசார் பாதுகாப்புடன் மீண்டும் அந்த இடத்தில் கல் நடப்பட்டது.

மேலும் கட்டமடுவு பகுதியில் பட்டா நிலம் வைத்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகாவை சேர்ந்த 2 விவசாயிகளுக்கு சொந்தமான பட்டா நிலத்தில் கம்பி வேலி அமைத்து இரும்பு கேட் போட்டு பூட்டி வைத்துள்ளதால் அங்கு அளவீடு கல் நடவில்லை. 

Next Story