அரசு பள்ளியில் ஆசிரியை பணியிட மாற்றத்துக்கு மாணவ-மாணவிகள் எதிர்ப்பு


அரசு பள்ளியில் ஆசிரியை பணியிட மாற்றத்துக்கு மாணவ-மாணவிகள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 29 Jun 2018 4:30 AM IST (Updated: 29 Jun 2018 3:06 AM IST)
t-max-icont-min-icon

சேந்தமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியை வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ - மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பனப்பாக்கம்,

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டை அடுத்த வெளியகரம் கிராமத்தில் பணிபுரிந்த ஆங்கில ஆசிரியர் பகவான் வேறு பள்ளிக்கு மாறுதலாகி சென்றதை தாங்கிகொள்ள முடியாத மாணவ - மாணவிகள் அவரை வேறுபள்ளிக்கு செல்லவிடாமல் பாசப்போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் வேலூர் மாவட்டத்திலும் ஆசிரியை மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ - மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெமிலியை அடுத்த சேந்தமங்கலம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 326 மாணவ - மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் பணிபுரிந்த தமிழாசிரியர் விஜயா அங்கிருந்து குடியாத்தம் அருகே உள்ள வளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கும், ஆங்கில ஆசிரியை சிவசங்கரி வேலூர் ஈ.வெ.ரா. நாகம்மை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கும், சமூக அறிவியல் ஆசிரியர் சூரியபிரகாஷ் பெரும்புலிபாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பணியிட மாறுதல் செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து அவர்கள் அந்தந்த பள்ளிகளுக்கு சென்றுவிட்டனர்.

இந்த நிலையில் சேந்தமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்து மாறுதலாகி சென்ற தமிழாசிரியை விஜயா மீண்டும் அதே பள்ளியில் வந்து பணியாற்ற வேண்டும் என்று கூறி நேற்று காலை மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலை 8.30 மணிக்கு வழக்கம் போல பள்ளிக்கு வந்த மாணவ - மாணவிகள் வகுப்புகளுக்கு செல்லாமல் அவர்களுடைய பெற்றோருடன் பள்ளி முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் நெமிலி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் பள்ளிக்கு சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவ- மாணவிகள் கூறுகையில் இந்த பள்ளியில் தமிழாசிரியை விஜயா கடந்த 22 ஆண்டுகளாக பணியாற்றி உள்ளார்.

எங்கள் அனைவரிடமும் மிகவும் அன்பாக பழகுவார். நாங்கள் அதிக மதிப்பெண் எடுக்க தமிழாசிரியை விஜயா காரணமாக இருந்துள்ளார். தற்போது அவர் எங்கள் பள்ளியைவிட்டு சென்றது எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. வகுப்பில் நடத்தப்படும் பாடங்களில் எங்களால் கவனம் செலுத்தமுடியவில்லை. எனவே தமிழாசிரியை விஜயா மீண்டும் எங்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்றனர்.

மாணவ- மாணவிகளின் கோரிக்கையை கடிதமாக எழுதி கொடுக்குமாறும், அதை முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர். அதை ஏற்று போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு சென்றனர்.

இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story