கட்டு விரியன் பாம்பு கடித்ததால் சுயநினைவை இழந்த சிறுவன் தீவிர சிகிச்சையால் உயிர் பிழைத்தான்


கட்டு விரியன் பாம்பு கடித்ததால் சுயநினைவை இழந்த சிறுவன் தீவிர சிகிச்சையால் உயிர் பிழைத்தான்
x
தினத்தந்தி 29 Jun 2018 4:30 AM IST (Updated: 29 Jun 2018 3:06 AM IST)
t-max-icont-min-icon

கட்டுவிரியன் பாம்பு கடித்ததால் சுயநினைவை இழந்து ஆபத்தான நிலையில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவன், டாக்டர்களின் தீவிர சிகிச்சையால் உயிர் பிழைத்தான்.

அடுக்கம்பாறை,

வேலூர் மாவட்டம், சோளிங்கரை அடுத்த மகன்காளிங்காபுரம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார், கூலித்தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி. இவர்களது மகன் சுனில் (வயது 11). அங்குள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான்.

கடந்த 25-ந் தேதி இரவு காற்றோட்டத்திற்காக வீட்டு வாசலில் விஜயகுமார் தனது மனைவி, மகனுடன் படுத்து தூங்கினார். நள்ளிரவு 1 மணி அளவில் சுமார் 8 அடி நீளம் கொண்ட கொடிய விஷமுடைய கட்டுவிரியன் பாம்பு ஒன்று தூங்கி கொண்டிருந்த சிறுவன் சுனிலை கடித்தது. வலி தாங்க முடியாமல் அலறியடித்து எழுந்த சிறுவன் சத்தம் போட்டு கதறி அழுதான்.

பெற்றோர் திடுக்கிட்டு எழுந்து பார்த்தபோது, அங்கு பாம்பு இருப்பதை கண்டு நடுங்கினர். பிறகு பெரிய விறகு கட்டையை எடுத்து பாம்பை அடித்து கொன்றனர். பின்னர், கடித்த பாம்புடன் விஜயகுமார் தனது மகனை மோட்டார்சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு சென்றார்.

அதற்குள் சுனிலுக்கு ரத்தம் உறைந்து, நரம்பு செயலிழந்து ஆபத்தான நிலை உருவானது. இதனால் சிறுவன் சுயநினைவை இழந்தான். அங்கு அவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுத்த ஒரு மணி நேரத்தில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதே ஆம்புலன்சில் பாம்பையும் கையோடு கொண்டு சென்றனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக, குழந்தைகள் நலத்துறை தலைவர் டாக்டர் தேரணிராஜன் தலைமையிலான மருத்துவ குழுவினர், சுய நினைவை இழந்த சிறுவன் சுனிலுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். கொடிய விஷத்தை முறிக்கும் மருந்து செலுத்தப்பட்டது. நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் சிறுவன் உயிர் பிழைத்தான்.

இதுகுறித்து டாக்டர் தேரணிராஜன் கூறுகையில், ‘சரியான நேரத்தில் சிறுவன் கொண்டு வரப்பட்டதால் அவன் உயிர் பிழைத்தான். உயிர் போகும் கடைசி நேரத்தில் சிறுவன் காப்பற்றப்பட்டுள்ளான். இப்போது நலமாக இருக்கிறான். இயல்பு நிலைக்கு திரும்பி நன்றாக பேசுகிறான். பொதுமக்கள் அரசு மருத்துவமனையை முதலில் நம்ப வேண்டும். பலர் ஆபத்தான நிலைக்கு சென்ற பின்னர் தான் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். பாம்புகடிக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது’ என்றார்.

சிறுவன் மற்றும் அவரது பெற்றோர், டாக்டர் தேரணிராஜன் மற்றும் மருத்துவ குழுவினருக்கு நன்றி தெரிவித்தனர். 

Next Story