பாடங்கள் கற்பதைபோல் சட்டங்கள் குறித்தும் மாணவ, மாணவிகள் கற்றுக்கொள்ள வேண்டும் நீதிபதி பேச்சு


பாடங்கள் கற்பதைபோல் சட்டங்கள் குறித்தும் மாணவ, மாணவிகள் கற்றுக்கொள்ள வேண்டும் நீதிபதி பேச்சு
x
தினத்தந்தி 29 Jun 2018 4:15 AM IST (Updated: 29 Jun 2018 3:09 AM IST)
t-max-icont-min-icon

பாடங்கள் கற்பதைபோல் சட்டங்கள் குறித்தும் மாணவ, மாணவிகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அரியலூர் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி கூறினார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் மேலராமநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக பள்ளி மாணவர்களுக்கான சட்டப்பயிற்சி சங்க வகுப்பு மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான சுமதி தலைமை தாங்கினார். அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் நீதிபதி சுமதி பேசியதாவது:-

அரியலூர் மாவட்டத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட நிர்வாகத்துறை இணைந்து அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சட்ட ஆலோசனைக்கான சிறப்பு முகாம் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிற்கு இணங்க நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தற்போது சட்ட பயிற்சி வகுப்புகள் மற்றும் சட்டத்துறை சார்ந்த விழிப்புணர்வு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதன் மூலம் பள்ளி பருவத்திலேயே மாணவர்கள் இந்திய அரசியலமைப்பு சட்டங்கள் மற்றும் கடமைகள் பற்றி எளிதாக தெரிந்து கொள்ள இயலும். அவர்களுடைய பெற்றோரிடம் சட்டங்கள் மற்றும் நீதிமன்றங்கள் பணிகள் குறித்து விரிவாக எடுத்து கூற முடியும்.

பள்ளி மாணவ-மாணவிகள் விளையாட்டு பயிற்சி, ஓவிய பயிற்சி, யோகா பயிற்சி மற்றும் பள்ளி பாடங்கள் கற்பது போல் சட்டங்கள் குறித்தும், பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு குறித்தும் கற்றுக்கொள்ள வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் சட்டப் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது.

இப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எளிதாக சட்ட பயிற்சிகள் மேற்கொள்ளவும் இதர கற்பித்தல் தொடர்பான பயிற்சிகள் மேற்கொள்ளவும் அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக கணினி, மேஜை, நாற்காலிகள் மற்றும் 50 சட்டப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனை மாணவ, மாணவிகள் முழுமையாக பயன்படுத்தி அனைத்து நிலைகளிலும் தங்களை உயர்த்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், வருவாய்த்துறையின் சார்பில் 16 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணையினையும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 32 பயனாளிகளுக்கு பயிர் கடனுக்கான காசோலையினையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை காலையும், வேளாண்மைத்துறையின் சார்பில் 11 விவசாயிகளுக்கு வேளாண் சார்ந்த இடுபொருட்களும் என மொத்தம் 62 பயனாளிகளுக்கு ரூ.14 லட்சத்து 39 ஆயிரத்து 463 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி, கலெக்டர் விஜயலட்சுமி ஆகியோர் வழங்கினர்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், தலைமை குற்றவியல் நீதிபதி சஞ்சீவி பாஸ்கர், சார்பு நீதிபதி சரவணன், அரியலூர் கோட்டாட்சியர் சத்திநாராயணன், அரியலூர் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜெயக்குமார் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மேலராமநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) குளோரி கிறிஸ்டினாள் வரவேற்றார். முடிவில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) பாலாஜி நன்றி கூறினார். 

Next Story