மாணவிக்கு பாலியல் தொல்லை: கோர்ட்டில் பாதிரியார் சரண் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு


மாணவிக்கு பாலியல் தொல்லை: கோர்ட்டில் பாதிரியார் சரண் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு
x
தினத்தந்தி 29 Jun 2018 3:45 AM IST (Updated: 29 Jun 2018 3:09 AM IST)
t-max-icont-min-icon

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் திருச்சி கோர்ட்டில் பாதிரியார் சரண் அடைந்தார். அவரை 12-ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

திருச்சி,

திருச்சி உறையூர் பகுதியில் உள்ள ஒரு பெண்கள் பள்ளியில் தாளாளர் ஆக இருப்பவர் பாதிரியார் குணஜோதி மணி (வயது62). இவர் அந்த பள்ளி விடுதியில் தங்கி இருந்து ஒன்பதாம் வகுப்பில் படித்து வரும் மாணவியிடம் பாலியல் ரீதியாக தொல்லைகள் கொடுத்ததாக மாணவியின் பெற்றோர் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதனை தொடர்ந்து ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார் பாதிரியார் குண ஜோதி மணி மீது பாலியல் வன்கொடுமையில் இருந்து சிறார்களை பாதுகாக்கும் சட்டத்தின் (போக்சோ) கீழ் கடந்த 16-ந்தேதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் பாதிரியார், போலீசார் தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக மதுரை ஐகோர்ட்டு கிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட்டு கிளை ஜூன் 26-ந்தேதி வரை போலீசார் பாதிரியார் ஜோதி குணமணியை கைது செய்வதற்கு இடைக்கால தடை விதித்தும், அதன் பின்னர் அவர் திருச்சி கோர்ட்டில் சரண் அடைந்து முன்ஜாமீன் பெற்றுக்கொள்ளும்படியும் உத்தரவிட்டு இருந்தனர்.

இந்த உத்தரவின்படி குணஜோதிமணி நேற்று திருச்சி இரண்டாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை வருகிற 12-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி என். குணசேகரன் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து பாதிரியார் குணஜோதி மணி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவி ஏற்கனவே கோர்ட்டில் ஆஜர் ஆகி ரகசிய வாக்குமூலம் அளித்து உள்ளார். அதில் பாதிரியார் குணஜோதிமணி பல மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறி இருப்பதாக தெரிகிறது. எனவே இதுபற்றி முழு அளவில் விசாரிப்பதற்காக அனைத்து மகளிர் போலீசார் குணஜோதி மணியை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர். போலீஸ் விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story