விவசாயிகளுக்கு எந்த சலுகையும் செய்யவில்லை எனக்கூறி பாவாடை கட்டிக்கொண்டு யோகா செய்த விவசாயிகள்


விவசாயிகளுக்கு எந்த சலுகையும் செய்யவில்லை எனக்கூறி பாவாடை கட்டிக்கொண்டு யோகா செய்த விவசாயிகள்
x
தினத்தந்தி 29 Jun 2018 4:30 AM IST (Updated: 29 Jun 2018 3:09 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளுக்கு எந்த சலுகையும் மத்திய அரசு செய்யவில்லை எனக்கூறி தஞ்சையில், பாவாடை கட்டிக்கொண்டு யோகா செய்த விவசாயிகள் பட்டை, நாமத்துடன் கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில துணைத்தலைவர் கக்கரை சுகுமாரன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வந்தனர்.

அவர்களில் 4 விவசாயிகள், பாவாடை அணிந்திருந்தனர். மேலும் நெற்றியில் பட்டை, நாமம் அணிந்து கையில் சில்வர் தட்டு, அலுமினிய தட்டு, பிளாஸ்டிக் தட்டு, மண் சட்டியை கொண்டு வந்தனர்.

விவசாயத்துக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் கொடுக்காமல் யோகா செய்ய அனைவரையும் வலியுறுத்துவதாகவும், யோகா செய்வதால் சாப்பிட உணவு கிடைத்து விடுமா? என்றும் குற்றம்சாட்டிய விவசாயிகள், மோடியை கண்டிக்கும் வகையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் யோகா செய்தனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க சென்றபோது அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், கையில் வைத்திருந்த மண் சட்டியையும், தட்டுக்களையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் கல்வி கடனை நிறுத்தியது மோடி ஆட்சியின் சாதனை, 2015-ம் ஆண்டு முதல் விவசாயிகள் வெட்டிய கரும்புக்கு நிலுவைத் தொகை இதுவரை வழங்காதது சாதனை, 2016-ம் ஆண்டு விவசாய உற்பத்தி பொருட்களுக்கு விலை அறிவிக்காதது சாதனை, 2017-ம் ஆண்டு இந்தியாவில் 12 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது சாதனை என்று எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்று கலெக்டர் அண்ணாதுரையை விவசாயிகள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

பின்னர் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்காமல் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

இது குறித்து தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில துணைத் தலைவர் கக்கரை சுகுமாரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை ஆணையம் சுதந்திரமாக செயல்பட வேண்டும். கர்நாடகத்திடம் இருந்து தமிழகத்திற்குரிய தண்ணீரை வழங்க காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். மத்திய அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் வந்தால் தான் பின்பட்ட குறுவை சாகுபடியாவது செய்ய முடியும். சம்பா சாகுபடியும் செய்ய முடியும்.

வெறும் யோகா செய்தால் மட்டும் நெல் சாகுபடி செய்ய முடியாது. மத்திய அரசின் 4 ஆண்டு கால ஆட்சியில் விவசாயிகளுக்கு எந்த சலுகையும் செய்யவில்லை. சில்வர் தட்டில் சாப்பிட்டோம்.

பின்னர் அலுமினிய தட்டு, பிளாஸ்டிக் தட்டு என மாறி இப்போது மண் சட்டியில் சாப்பிடும் நிலைக்கு வந்து இருக்கிறோம். விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை மத்திய, மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும். விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்ய வேண்டும். 2015-ம் ஆண்டு முதல் வழங்க வேண்டிய கரும்புக்கான நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வழக்கமாக குறைதீர்க்கும் கூட்டத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படும். ஆனால் நேற்று வழக்கத்தை விட துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் தொடங்கி கூட்ட அரங்கம் வரை ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த அனைவரையும் பலத்த சோதனைக்கு பின்னரே போலீசார் அனுமதித்தனர்.

Next Story