உள்ளாட்சித் துறையில்நிலுவையில் உள்ள கோப்புகள் ஆய்வு தீவிரம்: இயக்குனர் மலர்க்கண்ணன் அதிரடி


உள்ளாட்சித் துறையில்நிலுவையில் உள்ள கோப்புகள் ஆய்வு தீவிரம்: இயக்குனர் மலர்க்கண்ணன் அதிரடி
x
தினத்தந்தி 29 Jun 2018 3:23 AM IST (Updated: 29 Jun 2018 3:23 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சித்துறையில் நிலுவையில் உள்ள கோப்புகளை தூசி தட்டி எடுத்து ஆய்வு செய்யும் பணியில் இயக்குனர் மலர்க்கண்ணன் ஈடுபட்டுள்ளார்.

புதுச்சேரி,

உள்ளாட்சித்துறையில் நிலுவையில் உள்ள கோப்புகளை தூசி தட்டி எடுத்து ஆய்வு செய்யும் பணியில் இயக்குனர் மலர்க்கண்ணன் ஈடுபட்டுள்ளார்.

புதுவையில் வரிபாக்கிகளை வசூலிக்க கவர்னர் கிரண்பெடி அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். முதல்கட்டமாக மின்துறையில் பாக்கி வைத்துள்ளவர்கள் பட்டியலை வெளியிட்டு பாக்கியை வசூலிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

அடுத்தகட்டமாக உள்ளாட்சித்துறையில் வரிபாக்கி வைத்துள்ளவர்களின் பட்டியலை வெளியிட்டு பாக்கியை வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உள்ளாட்சித்துறை இயக்குனர் மலர்க்கண்ணனுடன் கவர்னர் கிரண்பெடி ஆலோசனை நடத்தினார்.

இந்தநிலையில் நேற்று உள்ளாட்சித்துறை இயக்குனர் மலர்க்கண்ணன் தனது துறையில் நிலுவையில் உள்ள கோப்புகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். நீண்ட காலமாக தீர்வு காணப்படாமல் உள்ள கோப்புகள் எவை? எதற்காக தீர்வு காணப்படாமல் உள்ளது?

அந்த கோப்புகள் தற்போது யார் வசம் உள்ளது? அந்த கோப்புகளுக்கு உடனடி தீர்வு என்ன? என்பது குறித்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதையொட்டி அந்த கோப்புகளை தூசி தட்டி எடுத்து அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனை வழங்கினார்.

ஊழியர்களுக்கான குறைகள், துறையின் செயல்பாட்டில் உள்ள தேக்கம், உள்ளாட்சித்துறை மூலம் நடைபெறும் பணிகளின் தற்போதைய நிலை ஆகியவை குறித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அவர் விசாரித்தார். அதிகாரிகள் தங்களிடம் வரும் கோப்புகளை அதன் முக்கியத்துவம் அறிந்து உடனடியாக பார்த்து அடுத்த அதிகாரிகளுக்கு அனுப்பவும் உத்தரவிட்டார்.

இயக்குனர் மலர்க்கண்ணனின் இந்த நடவடிக்கையால் நேற்று உள்ளாட்சித்துறை இயக்குனரகம் பரபரப்பாக காணப்பட்டது. இதனை தொடர்ந்து அடுத்தபடியாக பாக்கி வரிகளை வசூலிப்பது போன்ற அதிரடிகள் இருக்கும் என்று தெரிகிறது.

Next Story