மரத்தில் அரசு பஸ் மோதி 23 பேர் படுகாயம்


மரத்தில் அரசு பஸ் மோதி 23 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 29 Jun 2018 5:20 AM IST (Updated: 29 Jun 2018 5:20 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே, மரத்தில் அரசு பஸ் மோதி பெண்கள் உள்பட 23 பேர் படுகாயமடைந்தனர்.

கன்னிவாடி,

கோவையில் இருந்து நேற்று காலை அரசு பஸ் ஒன்று சிவகாசிக்கு புறப்பட்டது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த ராம்குமார் (வயது 46) என்பவர் பஸ்சை ஓட்டினார். விருதுநகரை சேர்ந்த செல்லப்பன் (53) என்பவர் கண்டக்டராக இருந்தார். பஸ்சில் சுமார் 40 பேர் பயணம் செய்தனர்.

அந்த பஸ் பழனி சாலையில் திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தது. நேற்று மதியம் 2 மணியளவில் திண்டுக்கல்லை அடுத்த முத்தனம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே பஸ் வந்தபோது மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் பஸ்சின் குறுக்கே வந்துள்ளார். இதனால் மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க பஸ்சை டிரைவர் திருப்பியுள்ளார்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி நின்றது. இதில் பஸ்சின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்தில் டிரைவர் ராம்குமார், கண்டக்டர் செல்லப்பன், மதுரையை சேர்ந்த ரஞ்சித் (18), தென்காசியை சேர்ந்த வெள்ளையம்மாள் (50), மானாமதுரையை சேர்ந்த கார்த்திகா (25), வால்பாறையை சேர்ந்த ரஞ்சனி (22), அருப்புக்கோட்டையை சேர்ந்த கருப்புச்சாமி (30) உள்பட 23 பேர் படுகாயம் அடைந்தனர்.

உடனே அக்கம்பக்கத்தினர், விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்சுகளில் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அறிந்த ரெட்டியார்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story