காங். மந்திரிகள் ஆலோசனை கூட்டத்தில் பரமேஸ்வர் பரபரப்பு பேச்சு


காங். மந்திரிகள் ஆலோசனை கூட்டத்தில் பரமேஸ்வர் பரபரப்பு பேச்சு
x
தினத்தந்தி 29 Jun 2018 5:25 AM IST (Updated: 29 Jun 2018 5:25 AM IST)
t-max-icont-min-icon

“கூட்டணி ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் சித்தராமையா கூறும் கருத்தை ஆதரிக்க வேண்டாம்” என்று காங்கிரஸ் மந்திரிகள் ஆலோசனை கூட்டத்தில் பரமேஸ்வர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. குமாரசாமி முதல்-மந்திரியாகவும், பரமேஸ்வர் துணை முதல்-மந்திரியாகவும் பொறுப்பு ஏற்றுள்ளனர். புதிய பட்ஜெட் தாக்கல் செய்ய குமாரசாமி முடிவு செய்துள்ளார். இதற்கு முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இதனால் சித்தராமையா மற்றும் குமாரசாமி இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இது கூட்டணி ஆட்சிக்கும் சிக்கலை உண்டாக்கி இருக்கிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் மந்திரிகள் ஆலோசனை கூட்டம் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் தலைமையில் பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அக்கட்சியை சேர்ந்த மந்திரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பரமேஸ்வர் பேசுகையில், நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து கூட்டணி ஆட்சி சுமுகமான முறையில் நடக்க ஒத்துழைப்பு கொடுப்போம் என்று பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்ந்து பேசிய பரமேஸ்வர், “கட்சியின் நலன் கருதி ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் நமது கட்சி தலைமை கூட்டணி வைத்துள்ளது. அதனால் இந்த கூட்டணியை தக்க வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். சித்தராமையா ஆட்சியை நடத்தியபோது, அவருக்கு நமது கட்சி தலைமையோ அல்லது நிர்வாகிகளோ ஒரு நாள் கூட தொல்லை கொடுத்தது கிடையாது. இந்த சூழ்நிலையில் சித்தராமையா கூட்டணி ஆட்சிக்கு எதிராக நடந்து கொள்வது தவறு. சித்தராமையாவின் கருத்துகளை சரி என்று சொல்லும் வகையில் யாரும் ஆதரிக்க வேண்டாம். எல்லா நிகழ்வுகளையும் கட்சி மேலிடம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. உரிய நேரத்தில் தக்க முடிவை மேலிடம் எடுக்கும்“ என்று பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக கூட்டத்தில் முடிவும் எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதற்கிடையே கூட்டணி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வருகிற 1-ந் தேதி பெங்களூருவில் நடக்கிறது. சித்தராமையா தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் குமாரசாமி, பரமேஸ்வர், வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். இதில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்குமாறு குமாரசாமி கேட்பார் என்று தெரிகிறது. இதை சித்தராமையா ஏற்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். கூட்டணி ஆட்சிக்கு எதிராக செயல்பட்டு வரும் சித்தராமையாவுக்கு கடிவாளம் போட பரமேஸ்வர் தீவிரமான முயற்சியில் இறங்கி இருக்கிறார். இதற்கு ஏற்ப அவர் காங்கிரஸ் கட்சியில் காய் நகர்த்தி வருகிறார். 

Next Story