ஓடும் காரில் பாம்பு ஈரோடு பஸ் நிலையம் அருகே பரபரப்பு
ஈரோடு பஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த காரில் பாம்பு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு,
பவானி அருகே உள்ள மாயபுரத்தை சேர்ந்தவர் பூபதி. நேற்று இவர் தன்னுடைய மனைவி மற்றும் உறவினர்களுடன் ஒரு காரில் மாயபுரத்தில் இருந்து பள்ளிப்பாளையம் நோக்கி சென்றார். காரை பூபதி ஓட்டினார். முன் இருக்கையில் அவருடைய மனைவியும், பின் இருக்கையில் அவருடைய உறவுப்பெண்கள் 2 பேரும் இருந்தனர்.
ஈரோடு பஸ் நிலையம் பகுதியில் உள்ள சத்தி ரோட்டில் மாலை 3 மணி அளவில் கார் திரும்பியபோது, பூபதியின் மனைவியின் கால்களில் ஏதோ வித்தியாசமாக ஊர்ந்து செல்வதை உணர்ந்தார். உடனே அவர் அது என்ன என்று பார்த்தபோது சுமார் 1½ அடி நீள பாம்பு ஒன்று கால்களில் நெளிந்து கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ‘அய்யோ பாம்பு, பாம்பு’ என்று சத்தம் போட்டு அலறியபடி கால்களை உதறினார். இதை கண்ட பூபதி, சட்டென்று காரை ரோட்டோரம் நிறுத்தினார். இதற்கிடையே காலில் இருந்து விழுந்த பாம்பு காரின் பின் இருக்கை பக்கமாக ஓடியது.
இதனால் பின் இருக்கையில் இருந்த பெண்கள் பயத்தில் அலறியபடி தங்களுடைய கால்களை இருக்கைக்கு மேலே உயர்த்தினர். ஆனால் அந்த பாம்பு காரின் இடுக்கு பகுதியில் சென்று மறைந்து கொண்டது. இதையடுத்து பூபதி உள்பட 4 பேரும் காரில் இருந்து இறங்கினர். இதுபற்றி அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் காரை சூழ்ந்து கொண்டு பாம்பை தேட தொடங்கினர். கூட்டம் கூடியதால் காரை நீரேற்று நிலையம் ரோட்டில் உள்ள சர்வீஸ் மையத்துக்கு பூபதி கொண்டு சென்றார். அங்கு காரின் இருக்கைகள் தனியாக கழற்றப்பட்டு பாம்பை தேடும் பணி நடந்தது. 5½ மணி நேர போராட்டத்துக்கு பின்னர் இரவு 8.30 மணி அளவில் பாம்பை யுவராஜ் பிடித்தார். அது கொம்பேறி மூக்கன் பாம்பு ஆகும். பிடிபட்ட பாம்பு வனப்பகுதியில் கொண்டுவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story