ஈரோடு அரசு விளையாட்டு விடுதி மாணவிகள் பள்ளிக்கூடம் செல்வதற்கு 3 மினிபஸ்கள் இயக்கம்
ஈரோடு அரசு விளையாட்டு விடுதி மாணவிகள் பள்ளிக்கூடம் செல்வதற்காக 3 மினிபஸ்கள் இயக்கப்படுகிறது.
ஈரோடு,
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அரசு மகளிர் விளையாட்டு விடுதி ஈரோடு வ.உ.சி. பூங்கா அருகில் செயல்பட்டு வருகிறது. அங்கு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் 89 மாணவிகள் தங்கி உள்ளனர். அவர்கள் தடகளம், கால்பந்து, கைப்பந்து, நீச்சல், ஜிம்னாஸ்டிக் ஆகிய விளையாட்டுகளில் பயிற்சி பெற்று வருகிறார்கள். இந்த மாணவிகள் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடம், சி.எஸ்.ஐ. மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடம், தில்லைநகரில் உள்ள செங்குந்தர் மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடம், வீரப்பன்சத்திரத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிக்கூடம் ஆகிய இடங்களில் படித்து வருகிறார்கள்.
விடுதியில் இருந்து பள்ளிக்கூடங்கள் செல்வதற்காக மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச பஸ் பாஸ் அட்டை வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் வீரப்பன்சத்திரம், தில்லைநகர் பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு செல்லும் மாணவிகள் தினமும் நடந்து சென்று வருகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் வீரப்பன்சத்திரம் சத்திரோட்டில் ரோந்து சென்றுகொண்டு இருந்தார். அப்போது அவர், அந்த வழியாக நடந்து சென்ற மாணவிகளிடம், ‘போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் ஏன் நடந்து செல்கிறீர்கள்?’ என்று கேட்டார். அதற்கு மாணவிகள், பள்ளிக்கூடத்தில் இருந்து விடுதிக்கு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் இருப்பதால் பஸ்சில் செல்லாமல் நடந்து செல்வதாக தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து மாணவிகள் பாதுகாப்பாக பள்ளிக்கூடங்களுக்கு செல்வதற்காக போக்குவரத்து வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகரிடம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் கேட்டுக்கொண்டார். இதற்கான நடவடிக்கையை மாவட்ட கலெக்டரும் மேற்கொண்டார். அப்போது மாணவிகளை பள்ளிக்கூடத்திற்கு கட்டணமின்றி அழைத்து செல்ல மினி பஸ் உரிமையாளர்கள் முன்வந்தனர்.
அதன்படி செங்குந்தர், சி.எஸ்.ஐ. பள்ளிக்கூடங்களுக்கு ஒரு மினிபஸ்சும், வீரப்பன்சத்திரம், பன்னீர்செல்வம் பூங்கா பகுதிகளில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களுக்கு தலா ஒரு மினிபஸ்சும் என மொத்தம் 3 மினி பஸ்கள் நேற்று முதல் இயக்கப்பட்டன. காலை 8.30 மணிஅளவில் அரசு விளையாட்டு விடுதி முன்பு மினிபஸ்கள் நிறுத்தப்பட்டன. அந்த பஸ்களில் மாணவிகள் உற்சாகமாக ஏறி பள்ளிக்கூடங்களுக்கு சென்றனர்.
இதுகுறித்து அரசு விளையாட்டு விடுதி மேலாளர் நோயிலின் ஜான் கூறும்போது, “தினமும் காலையில் மாணவிகள் உடற்பயிற்சி, விளையாட்டு பயிற்சிகளை செய்துவிட்டு பள்ளிக்கூடங்களுக்கு அவசரமாக புறப்பட்டு செல்கிறார்கள். இதனால் பள்ளிக்கூடங்களுக்கு செல்ல தாமதமும் ஏற்பட்டது. எனவே மாணவிகளின் நலன் கருதி போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி கொடுத்த மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகருக்கும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசனுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும், விளையாட்டு விடுதி மாணவிகளுக்கு மினிபஸ்களில் இலவசமாக பயணம் செய்ய பாஸ் அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதன் மூலம், வகுப்பு முடிந்த பிறகு பள்ளிக்கூடங்களில் இருந்து விடுதிக்கு செல்ல எந்த மினிபஸ்களில் வேண்டுமானாலும் மாணவிகள் இலவசமாக பயணம் செய்யலாம்”என்றார்.
Related Tags :
Next Story