காணாமல் போன குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய நாய்!


காணாமல் போன குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய நாய்!
x
தினத்தந்தி 30 Jun 2018 3:30 AM IST (Updated: 29 Jun 2018 11:33 AM IST)
t-max-icont-min-icon

அமெரிக்காவில் காணாமல் போன ஒரு குழந்தை, நாயின் உதவியால் மீட்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்கா மிச்சிகன் மாநிலம் வேன் பர்ரன் கவுன்டியைச் சேர்ந்த டொமினிக் பீக்கின் 2 வயது மகன் பிரின்ஸ்டன் பீக். சமீபத்தில் ஒருநாள், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த பிரின்ஸ்டன் திடீரென்று மாயமானான்.

வீட்டுக்கு அருகில் மரங்களும் சதுப்பு நிலமும் நிறைந்த காடும் உண்டு. குழந்தையைக் காணவில்லை என்றதும் பதறித் துடித்து ஓடிய டொமினிக், அவனது தண்ணீர் குடிக்கும் கப் மட்டுமே கிடைக்க, துவண்டு போனார்.

தன் குழந்தை சதுப்பு நிலத்தில் எங்காவது சிக்கியிருப்பான், இனி உயிர் பிழைக்க மாட்டான் என்று முடிவுக்கு வந்து விட்டார் டொமினிக்.

அவரது தகவலின்பேரில் சற்று நேரத்தில் போலீசாரும் விரைந்து வந்தனர்.

அவர்கள் கண்களில் டொமினிக் வீட்டு நாயின் காலடித் தடங்கள் பட, அதைப் பின்பற்றிச் சென்றனர். சுமார் அரை மைல் தூரத்தில் குழந்தை பிரின்ஸ்டனுடன் அப்போலோ எனப்படும் அந்த நாய் நின்றுகொண்டிருந்தது.

இச்சம்பவம் குறித்து நகர ஷெரீப் டேனியல் அப்போட் கூறுகையில், ‘‘அந்த நாயின் காலடித்தடங்கள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் அந்தக் காட்டில் குழந்தை போன பாதையைக் கண்டுபிடித்திருக்க முடியாது. அது மட்டுமின்றி அந்த நாயின் அருகாமைதான் குழந்தையின் உயிரைக் காத்திருக்கக்கூடும்’’ என்றார்.

குழந்தையின் உடலில் சிறு கீறல்களும், பூச்சிகள் கடித்ததால் ஏற்பட்ட சில தடிப்புகளுமே இருந்தன என்றும் மற்றபடி அவன் நல்ல நிலையில் இருப்பதாகவும் மருத்துவ உதவிக் குழுவினர் கூறினர்.

காணாமல்போய் சுமார் நான்கு மணி நேரத்தில் குழந்தையைக் கண்டுபிடிக்க பெரிதும் உதவியாக இருந்த நாய் அப்போலோவுக்கு போலீசார் தங்கள் சார்பில் உணவை பரிசாக அளித்தனர்.

‘‘என் மகனின் உயிரைக் காத்ததற்காக அப்போலோவுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். தனியாக இருந்திருந்தால் அவனுக்கு என்ன நேரிட்டிருக்கும் என்றே எண்ணிப்பார்க்க முடியவில்லை’’ என கண்கலங்கக் கூறுகிறார் டொமினிக் பீக்.

நாய், மனிதனின் நன்றியுள்ள தோழன் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது! 

Next Story